வலுவான நிதி மற்றும் மனித மூலதனம் இல்லாமல் ஒரு நாட்டை துரித பொருளாதார வளர்ச்சிக்கு இட்டுச் செல்ல முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
இலங்கையின் பொருளாதாரம் ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரமாக கட்டியெழுப்பப்பட வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் நடைபெற்ற இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் 36 ஆவது வருடாந்த மாநாட்டில் உரையாற்றும்போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது :
கடந்த வருடம் இலங்கை தொழிற்சங்க அமைப்பின் வருடாந்த மாநாட்டின் போது நாடு இருண்ட நிலையில் இருந்தது .
அப்போது உங்களில் பலருக்கு இலங்கையின் எதிர்காலம் குறித்த கேள்விக்குறி இருந்தது. ஆனால் உங்கள் அனைவரின் ஆதரவால், எங்களால் அதை மாற்ற முடிந்தது. அதற்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், எதிர்காலம் குறித்த நம்பிக்கை வைக்கக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.ஒழுங்கான பொருளாதார நிர்வாகத்தை நாம் மேற்கொண்டால், எதிர்காலத்தை நம்பிக்கையுடன் திட்டமிட முடியும்.
ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் பொருளாதாரம் முன்னெப்போதும் இல்லாத சவாலை எதிர்கொள்ளும் வரை பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடவில்லை. அதனால்தான் பொருளாதாரச் சிக்கல் வளர்ந்தது.
அரசியல் தலைவர்கள் பொருளாதாரம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்கத் தயங்கியதால் நிலைமை மேலும் மோசமானது. மேலும் இந்த பொருளாதார நெருக்கடியை மக்கள் கடுமையாக உணர்ந்தனர். அவர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில போராட்டங்கள் வேறு கோணத்தில் இருப்பதை போராட்டத்தின் நிறைவில் காண முடிந்தது. இந்நிலையில் தலைமைத்துவ வெற்றிடம் தென்பட்டது. அன்றிருந்த அரசு சுவரில் நசுக்கப்பட்டிருந்தது.
அதனால் தான் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
அதன்போது எதிர்க்கட்சித் தலைவரை அழைத்து அரசாங்கத்தைக் கையளிக்க ஜனாதிபதி முயற்சித்தார். ஆனால் அந்த சவாலை ஏற்க எதிர்க்கட்சித் தலைவர் தயாராக இருக்கவில்லை. உலகிலேயே முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் மற்றொருவருக்கு ஆட்சி அதிகாரம் வழங்க அழைப்பு விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு மறுப்பு தெரிவித்தது கூட கின்னஸ் சாதனையாகவே கருதுகிறேன்.
அதன்பின்னர் முன்னாள் ஜனாதிபதி என்னை நாட்டை பொறுப்பேற்க அழைத்தார். நான் பதவி கேட்கவில்லை. ஆனால் அப்போது நாடு நெருக்கடியில் இருந்தது. நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திய பின்னர், நாட்டை மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுத்தேன். அதன்படி, நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு மாதத்திற்குள் குறுகிய கால தீர்வுகளை வழங்க முடிந்தது. வரிசையில் நிற்கும் நிலைமைக்கு முடிவு கட்டப்பட்டது.
நாட்டின் பொருளாதாரம் விரைவில் மீண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். அந்த சமயம் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பல்வேறு வழிகளில் உதவினர். ஜனாதிபதி என்ற முறையில் நாட்டின் பொருளாதாரத்தை என்னால் மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் அவர்கள் செயற்பட்டார்கள். அப்போது என்னுடன் சவால்களை ஏற்றுக்கொண்ட அமைச்சர்கள், எம்பிக்களும் இருந்தனர். தொழில் வல்லுநர்கள் எமது திட்டங்களை ஆதரித்தனர்.
கடன் மறுசீரமைப்புச் செயல்முறை இன்னும் முடிவடையவில்லை. இந்த செயற்பாட்டை சீர்குலைக்க பல்வேறு நபர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த கடன் மேம்படுத்தல் திட்டம் நிறுத்தப்பட்டால், வங்கிகள் உட்பட அனைத்து துறைகளும் ஒரு வாரத்தில் வீழ்ச்சியடைந்து விடும்.
இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட போட்டிப் பொருளாதாரம் மட்டுமன்றி அபிவிருத்தி செய்வதற்கு தனியார் துறைக்கு திறந்த பொருளாதாரம் அவசியம். பொருளாதாரம் வேகமாக முன்னேற, நிதி மற்றும் மனித மூலதனம் இருக்க வேண்டும்.
உதாரணமாக கூறுவதாயின் இந்தியாவின் மகாராஷ்ட்ரா பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு நிர்மாணத்துறையின் முன்னேற்றமே காரணமாக அமைந்துள்ளது. அக்காலத்தில் இலங்கையின் பொருளாதரம் திறக்கப்பட்டிருந்தால் அந்த முதலீடுகள் இலங்கைக்கு கிடைத்திருக்கும். 30 வருடத்தில் மூலதனத்தை ஈட்டிக்கொள்வதற்கான திட்டங்கள் 10 வருடத்தில் வெற்றிகரமாக பூர்த்தி செய்யப்பட்டதன் பலனாக இந்தியா பெருமளவான மூலதனத்தை ஈட்டிக்கொண்டது. அதனால் புதிய தலைநகரத்தை ஆரம்பித்து சுற்றுலா துறையில் பெருமளவான முதலீட்டை இந்தியா மேற்கொண்டது.
இலங்கை 1977 இல் பொருளாதாரத்தை திறந்து மூலதனத்தை ஈட்டிக்கொள்ள முயற்சித்தது. அதனால் இலங்கைக்கு பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளும் கிடைத்தது. துரதிஷ்டவசமாக எமது நாட்டில் யுத்தமொன்று ஏற்பட்டது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் யுத்தம் நிறைவு பெற்ற பின்னர் மெதுவாக பொருளாதாரம் மீண்டெழுந்தது. அதன் பின்னர் 2021 – 2022களில் கொரோனா பரவலின் பின்னர் பொருளாதாரத்தில் சரிவு ஏற்பட்டது. நாட்டின் பொருளாதாரம் வங்குரோத்து நிலையை அடைந்தது. 2019 இல் நாட்டின் பொருளாதாரம் காணப்பட்ட நிலைக்கும் தற்போதுள்ள நிலைமைக்கும் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகின்றது. எவ்வாறாயினும், 2019இல் இருந்த நிலைமைக்கு நாடு வந்துகொண்டிருக்கிறது என்பதை கூற வேண்டும்.
வலுவான போட்டித்தன்மை மிக்க பொருளாதாரத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதேபோல் தனியார் துறையை முதன்மைப்படுத்திய பொருளாதாரம் இருந்தால் பொருளாதாரச் சரிவு ஏற்படாது. எமக்கு வெளிநாட்டு மூலதனம் தேவைப்படுகிறது. வெளிநாட்டு மூலதனங்களை ஈட்டும் அளவான வளர்ச்சியை நாம் அடைந்துகொள்ள வேண்டும். முதலீடு செய்யும் ஒவ்வொரு டொலருக்கும் பதிலாக மற்றுமொரு டொலரை சம்பாதித்துகொள்வதே இலக்காக இருக்க வேண்டும்.
அதனாலேயே முதலீட்டுச் சபை மற்றும் ஏற்றுமதிச் ஊக்குவிப்புச் சபை ஆகியவற்றுடன் இணைந்து புதிய பொருளாதார ஆணைக்குழு ஒன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளோம். மற்றைய நாடுகளுடன் ஒப்பிடுகைளில் முதலீடுகளை கவரக்கூடிய நாடாக நாம் இருக்க வேண்டும். பங்களாதேஷ் மற்றும் இந்தியாவுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்ல வேண்டும். தெற்காசியாவின் அனைத்து நாடுகளுடனும் எமக்கு பெரும் போட்டி காணப்படுகிறது. அதற்கு நாம் தயாராக இல்லாவிட்டால் துரித அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது. துரித அபிவிருத்தி அடையும் வலுவான போட்டித்தன்மை மிக்க பொருளாதாரம் ஒன்று எமக்கு அவசியப்படுகிறது.
இந்நாட்களில் பெருமளவானோர் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். சிறந்த எதிர்காலத்தை நோக்கமாக கொண்டே அவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். குறுகிய காலத்திற்கு அது நன்மையளிப்பதாக தெரிந்தாலும், நாட்டை விட்டுச் செல்வோரில் அதிகளவானோர் சம்பாதித்துக்கொண்டு நாடு திரும்புகின்றனர். அதனால் மாத்திரம் பிரச்சினைகள் தீர்ந்துவிடுவதில்லை.மனித வள மூலதனம் போதியளவில் இல்லாமையே நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. அதற்காக நமது இளைஞர் யுவதிகளை பயிற்றுவிக்க வேண்டும். அதற்கான திட்டமிடல் ஒன்றும் அவசியம்.
பல்கலைக்கழங்களுக்குள் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. பொறியியல், அறிவியல் துறைகளுக்குள் பெருமளவானோர் துரிதமாக வெளியேறுகின்றனர். பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை நிலவுகிறது. அதேபோல் வைத்தியசாலைகளில் போதியளவு வைத்தியர்கள் இல்லை. அதற்கு தீர்வாக தனியார் துறை அல்லது வேறு நிறுவனங்களுடன் இணைந்து புதிய பல்கலைக்கழங்களை ஆரம்பிக்கவுள்ளோம்.
அதனூடாக இத்துறைக்குள் காணப்படும் பற்றாக்குறைகளை நிவர்த்திக்க எதிர்பார்த்துள்ளோம். நாட்டிற்குள் புதிய பல பல்கலைக்கழங்களை உருவாக்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகிறோம். குருநாகலில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியை, அறிவியல் தொழில்நுட்ப கல்லூரியாக மாற்றியமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொலன்னறுவை தனியார் பல்கலைகழகத்தை ஆரம்பிப்பதற்கும் தற்போது விண்ணப்பம் கிடைத்துள்ளது. உரிய நிறுவனங்களுடன் இணைந்து குறைந்தபட்சம் 04 - 05 பல்கலைக்கழகங்களையாவது ஆரம்பிக்க வேண்டும்.
அதற்குரிய புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை ஏற்படுத்திக்கொடுக்க எதிர்பார்த்துள்ளோம். அதற்காக உங்களது அமைப்பின் ஒத்துழைப்பையும் வழங்க முடியும். இதனால் இலாபமீட்டும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கு போட்டித்தன்மை மிக்க பொருளாதாரமும் தனியார்துறை பொருளாதாரமும் அவசியப்படுகிறது. கண்டியில் புதிய பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிக்குமாறு கடந்த இந்திய சுற்றுப் பயணத்தின் போது சென்னையிலிருக்கும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (IIT) அழைப்பு விடுத்தேன்.
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழங்களின் (SLIIT) எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. அது மட்டும் போதுமானதல்ல. புதிய பல்கலைக்கழங்களுக்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான கேள்விகளும் எழுந்துள்ளன. லொஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலுள்ள அறிவியல் தொழில்நுட்பவியல் பல்கலைக்கழகம் மற்றும் கோலம்பூரிலுள்ள பல்கலைக்கழகம் என்பன இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளன. அரசாங்கம் குறைந்தபட்சம் 5 – 6 வரையிலான பல்கலைக்கழங்களை நிறுவ எதிர்பார்த்துள்ளது. அதற்காக தனியார் பல்கலைக்கழங்களை வலுவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டு ஒத்துழைப்பின் ஊடாக, பொருளாதாரத்தை துரிதமாக பலப்படுத்த முடியும். மனித வள மூலதனம் அவசியப்படும். இவ்விடயத்தில், இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்புக்கு பெரும் பொறுப்பு உள்ளது.
மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் நான் பாராளுமன்றத்தில் உரையாற்றினேன். மாகாண சபை மட்டத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை உருவாக்குவதற்கான சட்டங்களை கொண்டு வர முடியும். பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள சட்டத்திற்கு இணங்கும் வரையில் ஆளுநர் அந்த பல்கலைக்கழகத்தை ஏற்றுக்கொண்டு நிறுவுவதற்கான சட்டங்களை நாம் கொண்டுவருவோம்.
நிதி மூலதனம் மற்றும் மனித வள மூலதனம் இல்லாமல், ஒரு நாடு துரித பொருளாதார வளர்ச்சியை அடைய முடியாது. மேலும், போட்டித்தன்மை மிகுந்த பொருளாதாரம் தொடர்பான கனவுகளையும் காண முடியாது. எனவே இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின்(OPASL) நாம் முன்னோக்கிச் செல்வதற்குத் தேவையான மனித வளங்களை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் பெரும் பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.” என ஜனாதிபதி தெரித்தார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் (OPASL) அதிகாரிகள் சிலருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி வைக்கப்பட்டன.
இலங்கை வல்லுநர் சங்கங்களின் சம்மேளனத்தின் (OPASL) தலைவர் சட்டத்தரணி ருசிரா குணசேகர, செயலாளர் சட்டத்தரணி சுஜீவ லால் தஹாநாயக்க, இலங்கை வல்லுநர் சங்கங்களின் அமைப்பின் புதிய தலைவராக தெரிவு செய்யப்படவிருக்கும் சட்டத்தரணி சரத் கமகே உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.