நாட்டில் மீண்டும் இனவாத முரண்பாடுகள் ஏற்படும் வகையிலான சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச புலனாய்வு பிரிவிலிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றும், ஆனால் ஒருசில பிரதேசங்களில் ஒருசில குழுக்கள் அரசியல் நோக்கங்களுக்காக இனவாத பிரச்சினைகளை தீவிரப்படுத்த கடும் முயற்சி எடுத்து வருவதாக தேசிய புலனாய்வு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சபையில் சற்று முன் (24) அறிவித்தாா்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டாா். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய பாதுகாப்பு தொடர்பில், இலங்கையில் மீண்டும் இனவாத மோதல்கள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாக சர்வதேச புலனாய்வு பிரிவு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக இன்று காலையில் சில சமூக வலைத்தளங்களிலும் இந்த செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவரும் இதுதொடர்பில் சபையில் கேள்வி எழுப்பியிருந்தாா்.
அவ்வாறு, எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு பிரிவிடமிருந்தோ அல்லது நிறுவனத்திடமிருந்தோ தேசிய பாதுகாப்பு தொடர்பிலும், இனவாத முரண்பாடுகள் தொடர்பிலும் எமக்கு எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. மிகவும் பொறுப்புடன் இதனை கூறுகிறேன்.
அதேபோன்று, முகப்புத்தகம் போன்றவற்றில் வெளியிடப்படும் கட்டுக் கதைகளுக்கும் எந்நேரமும் எம்மால் பதிலளித்துக்கொண்டும் இருக்க முடியாது. அதனால், இதுதொடர்பில் முதலில் பாராளுமன்றத்துக்கு கருத்து தெரிவிப்பேன். ஆனாலும், தற்போது எமது நாட்டில் ஒருசில இடங்களில் ஒருசில குழுக்கள் அரசியல் நோக்கங்களுக்காக நாட்டில் இனவாத பிரச்சினையை உருவாக்க பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாக எமது புலனாய்வு பிரிவு தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
அந்த குழுக்கள் தொடர்பில் பாதுகாப்பு பிரிவும் அரசும் விசேட கவனம் செலுத்தியுள்ளது.
முல்லைத்தீவைச் சேர்ந்த அண்டனி ஜெகநாதன் பீட்டர் இளஞ்செழியன் என்பவர், குருந்தி விகாரை தொடர்பில் விசேட அவதானம் செலுத்திவருபவர். அவர் ஒரு கத்தோலிக்கர். இந்த விடயத்தில் அவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்பது பிரச்சினைக்குரிய விடயமாகும். ஆனால், இந்த விடயத்தில் பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
மேலும், குருந்தி தொல்லியல் காணியினூடாக பௌத்தத்தின் எதிர்காலமோ அல்லது இந்து சமயத்தின் எதிர்காலமோ தீர்மானிக்கப்படபோவதில்லை. 30 வருடகால யுத்தத்தை கடந்தும் இன்னும் நாம் பாடம் கற்றுக்கொள்ள வில்லை.
இன்னும் இனவாத பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பவர்களுக்கு எங்களின் கவலையை தெரிவித்துக்கொள்கிறோம். எது எவ்வாறாயினும் அவ்வாறான இனவாத பிரச்சினையை உருவாக்க புலனாய்வு பிரிவும், பாதுகாப்பு பிரிவும், அரசாங்கமும் இடமளிக்காது என்றாா்.