Our Feeds


Thursday, August 17, 2023

SHAHNI RAMEES

சட்டவிரோதமான செயற்படும் அனைத்து இன மக்களுக்கும் எதிரானவன் நான் : சாணக்கியன்

 

சட்டவிரோதமாக யார் செயற்பட்டாலும் அதற்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 



சட்டவிரோதமாக எந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டாலும் அது தவறு என்பதே எனது நிலைப்பாடு. அதிலும் அரசியல் செல்வாக்குடன் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புச் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. உதாரணமாக மகாவலி அபிவிருத்தி தொடர்பாக எழுந்த பிரச்சினைகளில் அண்மையில் கோப் குழுவில் நான் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் தற்போது என்ன நடக்கின்றது.



இரவோடிரவாக ஒரு பிரதேசத்தில் இவ்வாறான காணி அபகரிப்புச் செயற்பாடுகளை சாதாரண மக்களால் முன்னெடுக்க முடியாது என்பது அனைவருக்குமே தெரிந்த விடயம்.



ஆனால் சில அரசியல் பின்புலத்துடன் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதை அனுமதிக்க முடியாது. குறிப்பாக நான் இனிமேல் இவ்வாறான விடயங்களுக்கெதிராக நடவடிக்கைகளை முன்னெடுப்பேன்.



அதில் எந்த பாரபட்சத்திற்கும் இடமில்லை. அது தமிழ்பேசும் சமூகமாக இருந்தாலும் தவறுதான். பெரும்பான்மை சமூகமாக இருந்தாலும் சரி தவறுதான். எந்த சமூகத்திற்கு எதிராகவும் நான் செயற்படப்போவதில்லை. ஆனால் இந்த விடயங்களுக்கெதிராக நான் செயற்படும்போது குறித்த சமூகங்களுக்கு எதிரானவன் என்று சிலர் முத்திரை குத்தப் பார்க்கின்றார்கள்.



எனவேதான் இந்த விடயத்தில் அரசாங்கம் மகாவலி அபிவிருத்தி விடயத்தில் காணி அபகரிப்பு சம்பவங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை. இது கவலைக்குரிய விடயமாகும். தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள சில திணைக்களங்கள் கூடிய அதிகாரங்களைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். குறிப்பாக நாவலடி மயிலத்தமடு பிரதேசங்களில் இடம்பெற்ற சம்பவங்களில் பல காணிகள் சட்டவிரோதமாகவும் அத்துமீறியும் முன்னெடுக்கப்பட்ட விடயங்களாகும்.



குறிப்பாக பாடசாலைக்குரிய காணிகள் அபகரிக்கப்படுகின்ற சம்பவங்களும் இடம்பெறுகின்றன. இதற்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஒரு சில அரசியல்வாதிகளின் பின்னணியில் குறிப்பாக சில் இராஜாங்க அமைச்சர்களின் ஆதரவுடன் சில சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் இந்த காணி அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.அண்மையில் ஜனாதிபதி குறிப்பிட்ட காணி விடுவிப்பு என்பதும் வெறும் கண்துடைப்பாக மாறிவிடக்கூடாது. வெறுமனே வாய் வார்த்தைகளால் மாத்திரம் ஜனாதிபதி இந்த விடயத்திற்கு தீர்வைத் தருவதாக ஜனாதிபதி கூறிவிட முடியாது. எனவே சட்டவிரோதமாக எந்த விடயங்கள் இடம்பெற்றாலும் அதற்கெதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க நான் தயங்கப் போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »