ஹரியானாவின் மேவாத்தில் திங்களன்று நடந்த வகுப்புவாத வன்முறையைத் தொடர்ந்து, குருகிராமின் 57 வது செக்டரில் உள்ள ஒரு பள்ளிவாயலுக்கு நள்ளிரவில் தீவைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பள்ளியின் இமாம் உயிரிழந்துள்ளார். ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
"இந்த தாக்குதலில் பள்ளிவாயலின் இமாம் முகமது சாத் உயிரிழந்துவிட்டார்," என்று பள்ளிவாயலின் நிர்வாகக் குழுவின் தலைவர் அஸ்லம் கான் பிபிசியிடம் கூறினார்.
குருகிராமின் டிசிபி (கிழக்கு) நிதீஷ் அகர்வால், இந்த தாக்குதலை பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.
“மசூதியின் நாயப் இமாம் தாக்குதலில் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
“மசூதி தாக்கப்பட்ட நேரத்தில் போலீஸ் படைகள் அங்கு பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டிருந்தன. ஆனால் தாக்குதல் நடத்தியவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அவர்கள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களை போலீசார் சேகரித்துவருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று டிசிபி மேலும் கூறினார்.
முன்னதாக திங்களன்று ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள மேவாத் பகுதியில் சமய யாத்திரையின் போது இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் சுமார் 20 பேர் காயமடைந்தனர் மற்றும் இரண்டு ஊர்க்காவல் படையினர் கொல்லப்பட்டனர்.
நேற்றிரவு நடந்த இந்த சம்பவத்திற்குப்பிறகு குருகிராம் முழுவதிலும் இருந்து வகுப்புவாத வன்முறை பற்றிய வேறு எந்தச் செய்தியும் இல்லை என்று டிசிபி தெரிவித்தார்.
"என் சகோதரரின் முகத்தை மட்டுமே என்னால் பார்க்க முடிந்தது. நாங்கள் இப்போது சவக்கிடங்கில் இருக்கிறோம். கடந்த ஏழு மாதங்களாக இந்த மசூதியின் இமாமாக எனது சகோதரர் இருந்தார். அவரின் வயது வெறும் 22 மட்டுமே,” என்று இமாம் சாத்தின் சகோதரர் ஷதாப் அன்வர் பிபிசியிடம் கூறினார்.
நேற்று இரவு சுமார் 11:30 மணிக்கு சாதிடம் ஷதாப் பேசினார்.
”எங்களது பூர்வீகம் பீகார். இன்று என் சகோதரர் வீடு திரும்புவதாக இருந்தது. அவரிடம் டிக்கெட் இருந்தது. நான் அவரை தொலைபேசியில் அழைத்து இப்போது நிலைமை சரியில்லை என்று விளக்கினேன். நிலைமை சீராகும் வரை மசூதியை விட்டு வெளியே வரவேண்டாம் என்றேன். இதுதான் நான் அவருடன் கடைசியாகப்பேசிய வார்த்தைகள்,” என்று ஷதாப் குறிப்பிட்டார்.
’பாதுகாப்பு அளிப்பதாக காவல்துறை உறுதி'
மேவாத்தில் நடந்த வன்முறைக்குப் பிறகு, திங்கள்கிழமை மாலை ஒரு போலீஸ் குழு எங்களை அணுகி எங்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாக நம்பிக்கை அளித்தது," என்று மசூதியை நிர்வகிக்கும் ஹரியானா அஞ்சுமன் அறக்கட்டளையின் தலைவர் முகமது அஸ்லம் கான் பிபிசியிடம் தெரிவித்தார்.
“உள்ளூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ் குழு எங்களிடம் வந்தது. மசூதியின் பாதுகாப்பை போலீஸார் செய்வார்கள் என்று எங்களிடம் கூறினர். போலீஸ் குழு மசூதியிலேயே இருக்கும் என்று எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. மசூதியின் இமாம் மற்றும் இங்கு வசிக்கும் இரண்டு ஊழியர்களைப் பற்றி நாங்கள் பேசியபோது, கவலைப்பட ஒன்றுமில்லை என்று போலீசார் தெரிவித்தனர்,” என்கிறார் அஸ்லம் கான் .
மசூதி கமிட்டியிடம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதாக டிசிபி நிதிஷ் அகர்வாலும் பிபிசியிடம் தெரிவித்தார்.
”மக்ரீப் தொழுகையை முடித்துவிட்டு நாங்கள் மசூதியிலிருந்து திரும்பியிருந்தோம். போலீசாரும் உடனிருந்தனர். நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணிக்கு இடையே மசூதி திடீரென தாக்கப்பட்டது. முதலில் மசூதியின் கேமராக்கள் உடைக்கப்பட்டன. பின்னர் தீ வைக்கப்பட்டது,” என்று அஸ்லம் கான் கூறினார்.
“பீகாரை சேர்ந்த மசூதியின் இமாம் சாத், தாக்குதல் நடத்தியவர்களால் கொல்லப்பட்டார். குர்ஷித் என்ற நபர் படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். மேலும் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
2004 ஆம் ஆண்டில் ஹரியானா அரசு குருகிராமில் 17 கோவில்கள், 2 குருத்வாராக்கள், ஒரு தேவாலயம் மற்றும் ஒரு மசூதி கட்டுவதற்கு நிலம் ஒதுக்கியது.
இந்த மசூதி அந்த நிலத்தில் கட்டப்பட்டுள்ளது. ந்யூ குருகிராமில் உள்ள ஒரே மசூதி இதுவாகும். அருகில் வசிக்கும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த இங்கு வருகிறார்கள்.
“போலீசார் எங்களை மசூதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தாக்குதல் நடந்ததற்கான தடயங்கள் இங்கு தெளிவாகத் தெரிகிறது. மசூதி கட்டிடம் நிறைய சேதம் அடைந்துள்ளது” என்று தாக்குதலுக்குப் பிறகு மசூதியை அடைந்த ஒரு செய்தியாளர் பிபிசியிடம் கூறினார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இணைந்து திங்கள்கிழமை மேவாத்தில் சமய யாத்திரை மேற்கொண்டன. இந்த யாத்திரையின் போது இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அதன்பின் பல இடங்களில் வன்முறை வெடித்தது.
BBC செய்தியாளர் நேரில் பார்த்த செய்திகள்.
குருகிராமில் உள்ள சோஹ்னா பகுதியிலும் திங்கள்கிழமை மாலை வன்முறை ஏற்பட்டது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களின் கடைகள் குறிவைக்கப்பட்டன.
பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் சோஹ்னா பகுதிக்குச்சென்றார்.
“சோஹ்னாவில் உள்ள சாலைகளில் தற்போது போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். சாலையின் இருபுறமும் தள்ளு வண்டிகளும், முஸ்லிம்களின் கடைகளும் எரிக்கப்பட்டுள்ளன. ’தி அர்பன் க்ரோசர்’ என்ற கடையும் கொளுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து இன்னும் புகை வெளியேறுவதை பார்க்க முடிகிறது,” என்று அபினவ் கோயல் கூறுகிறார்.
“சாலையின் இருபுறமும் எரிந்துபோன வாகனங்கள் மற்றும் கடைகள் காணப்படுகின்றன. சில கடைகளில் இருந்து புகை வந்து கொண்டிருந்தது,” என்றார் அவர்.
"நேற்று மதியத்திற்குப் பிறகு, இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கடைகளைத் தாக்கி தீவைக்கத் தொடங்கினர்." என்று பிபிசியிடம் பேசிய சோஹ்னாவில் வசிக்கும் ஜெம்ஷெத் தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் ஜெம்ஷெத்தின் சித்தப்பா பலத்த காயம் அடைந்தார். “அவரது தலையில் பதினைந்துக்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளன. சம்பவத்திற்குப் பிறகு அவர் சோஹ்னாவை விட்டு பாதுகாப்பான இடத்திற்குச் சென்றுவிட்டார்,” என்று ஜெம்ஷெத் கூறினார்.
திங்கள்கிழமை மாலை சோஹ்னாவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகவும், அதில் தனக்குத் தெரிந்த பலர் காயமடைந்துள்ளதாகவும் ஜெம்ஷெத் கூறுகிறார்.
சோஹ்னாவிலிருந்து நூஹ் நோக்கிச்சென்றால் சாலைகள் முற்றிலுமாக வெறிச்சோடி காணப்படுகின்றன.
“சாலைகள் முற்றிலும் வெறிச்சோடி உள்ளன, ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டருக்கு பிறகும் போலீஸ் தடுப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினரின் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் சாலைகளில் காணப்படுகின்றன. நூஹ் பகுதியில் மத்திய ரிஸர்வ் போலீஸ் படையினர் காணப்படுகின்றனர்,” என்று பிபிசி செய்தியாளர் அபினவ் கோயல் கூறுகிறார்.
எங்களுடைய ஆட்கள் தாக்கப்பட்டனர்: வி.எச்.பி
விஷ்வ ஹிந்து பரிஷத் திங்கள்கிழமையன்று மேவாத்தில் ஒரு சமய யாத்திரைக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேரணியின் மீது அப்பகுதியைச் சேர்ந்த ஜிகாதி விஷமிகள் திடீரென தாக்குதல் நடத்தியதாக விஷ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியுள்ளது.
“எங்கள் அமைப்பைச் சேர்ந்த பலர் காயமடைந்துள்ளனர். சில உயிரிழப்புகள் பற்றிய செய்திகளும் வந்துள்ளன. இருப்பினும் நாங்கள் அதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை. தரவுகளை சேகரித்து வருகிறோம்,” என்று பிபிசியிடம் பேசிய விஷ்வ ஹிந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் வினோத் பன்சல் தெரிவித்தார்.
“நன்கு திட்டமிட்ட சதியின் ஒரு பகுதியாக எங்கள் யாத்திரை மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. ஏராளமான மக்கள் அங்கு சிக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவது நள்ளிரவு வரை தொடர்ந்தது,” என்றார் வினோத் பன்சல்.
“எங்கள் ஆட்கள் யாரும் இப்போது அங்கு சிக்கியிருக்கவில்லை. நிர்வாகமும், காவல்துறையும் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டனர்” என்று வினோத் பன்சல் குறிப்பிட்டார்.
மசூதி மீதான தாக்குதல் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்த பன்சல், “எங்களுக்கு இதுபற்றித் தெரியாது. அது நடந்திருந்தால் அது மிகவும் வருத்தப்பட வேண்டிய ஒன்றாகும். இதன் பின்னணியில் சதி உள்ளதா என நிர்வாகம் விசாரிக்க வேண்டும்,” என்றார்.
மறுபுறம் ஹரியானாவில் நடந்த வன்முறைக்குப் பிறகு பேசிய மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ், “இந்த அளவுக்கு நடந்துள்ள வன்முறை, திடீரென்று நடந்தது அல்ல. இரு சமூகத்தினரும் நூஹ் பகுதியில் நீண்ட காலமாக அன்புடன் வாழ்ந்து வருகின்றனர். இங்கு யாரோ விஷத்தை விதைத்துள்ளனர். சிலர் திட்டமிட்டு சதி செய்துள்ளனர். நுழைவாயில் மற்றும் கூரைகளில் கற்கள், ஆயுதங்கள், தோட்டாக்கள் அனைத்தும் வைக்கப்பட்டிருந்ததை பார்க்கும்போது இது திடீரென்று நிகழ்ந்து அல்ல என்றே தோன்றுகிறது,” என்று கூறினார்.
நன்றி: BBC தமிழ்