அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் இலங்கைக்கு 1.3 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரம், தாய் மற்றும் குழந்தை சுகாதார சேவைகள் தொடர்பான உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் பொருட்கள் சுகாதார அமைச்சிடம் கையளிக்கப்பட்டன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கையளிக்கும் நிகழ்வு நேற்று (16) சுகாதார அமைச்சில் இடம்பெற்றது.
30 பிரசவ படுக்கைகள், 20 மினி-ஆட்டோகிளேவ்கள், 6 எடை தராசுகள், 16,500 ஜடெல்லே, 31,500 ஹார்மோன் அல்லாத IUDகள், 900 எச்ஐவி பரிசோதனை கருவிகள் மற்றும் 300 சிபிலிஸ் பரிசோதனை கருவிகள் இக்கையளிப்பில் இருந்தன.
இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்புத் துறைக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் UNFPA வழங்கிய முக்கிய ஆதரவை இப்பங்களிப்பானது எடுத்துக்காட்டுகிறது.