Our Feeds


Friday, August 4, 2023

News Editor

மிஹிந்தலை மின் கட்டணத்தை சஜித் செலுத்துகிறார்



 மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவர்களினதும் தனவந்தர்களினதும் உதவியுடன் 41 இலட்சம் ரூபா மதிப்பிலான மின் கட்டண பட்டியலை செலுத்த நடவடிக்கை எடுத்துவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கு பௌத்த மதத்தை கொண்டு வந்த மிஹிது தேரரின் பாதம் தொட்ட வரலாற்று சிறப்பு மிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு அரசாங்கம் பாரிய மின் கட்டணத்தை சுமத்தியதாகவும் இதன்காரணமாக விகாரையின் மகாநாயக்க தேரரும் நிர்வாகமும் நெருக்கடி நிலைக்கு உள்ளானதாகவும்  இது தொடர்பில் அண்மையில் தான் விகாரைக்கு விஜயம் செய்த போது இது தொடர்பில் மகாநாயக்க தேரர் என்னிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைய மின் கட்டணத்தையும் பெரஹராவிற்கான பூரண செலவை ஏற்பதாக தான் வாக்குறுதி அளித்ததாகவும் இதன்படி விகாரையின் 41 இலட்சம் ரூபா மின் கட்டணத்தை ஐக்கிய மக்கள் சக்தி அங்கத்தவர்கள் மற்றும் தனவந்தர்களின் உதவியுடன் செலுத்த நடவடிக்கை எடுத்து விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல வருடங்களாக செலுத்தாமல் உள்ள தனது பங்காளிகளின் மின் கட்டணத்தை அறவிடாது, பங்காளிகளின் வீட்டு மின் விநியோகத்தை துண்டிப்பதற்கு எண்ணம் கொள்ளாத அரசாங்கம், வரலாற்று சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் மின் விநியோகத்தை துண்டித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தர்ப்பங்களுக்காக மாத்திரம் மத, கலாச்சாரத்தை கையில் எடுக்கும் தற்போதைய அரசாங்கத்தின் உண்மையான சுயரூபம் இந்த மின்துண்டிப்பின் மூலம் வெளிப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான கோழைத்தனமான நடவடிக்கைகளின் ஊடாக பௌத்த மற்றும் ஏனைய மதஸ்தலங்கள் மீது மேற்கொள்ளும் கீழ்தரமான குந்தக செயற்பாடுகளை உடன் நிறுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »