அஹமட்
அரசியலில் ஐக்கிய தேசியக் கட்சியை தான் தேர்ந்தெடுத்தமைக்கு, அந்தக் கட்சியில் இன, மத பேதங்கள் இல்லை என்பதுதான் காரணம் என்று, ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும் ‘லொயிட்ஸ்’ நிறுவனத்தின் தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி செயற்குழு அமைத்தல் மற்றும் ஒன்று கூடல் நிகழ்வு இன்று (06) அட்டாளைச்சேனை லொயிட்ஸ் மண்டபத்தில் அமைப்பாளர் ஆதம்லெப்பை தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
இதில் தலைமை உரை நிகழ்த்தும் போதே, மேற்கண்ட விடயத்தை ஆதம்லெப்பை கூறினார்.
அங்கு அவர் தொடர்ந்து பேசுகையில்;
முன்னாள் ஜனாதிபதி மக்களால் விரட்டப்பட்டபோது, நாட்டைப் பாரமெடுப்பதற்கு வேறு கட்சிகளின் தலைவர்கள் எவரும் முன்வரவில்லை. ஆனால் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்கிற ஒரேயொரு நோக்த்தில் – எமது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை துணிச்சலுடன் பொறுப்பேற்றார்.
நமது நாட்டில் கடந்த வருடம் எரிபொருள், சமையல் எரிவாயு என – எதைப் பெறுவதென்றாலும் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. பணம் இருந்த போதும் பொருட்களை வாங்க முடியாமலிருந்தது. இந்த நிலையை ரணில் விக்ரமசிங்கவே இல்லாமலாக்கினார். தற்போதைக்கு ஓரளவாயினும் இந்த நாட்டை எமது தலைவர் நிமிர்த்தித் தந்துள்ளார்.
இந்த நாட்டை சிறப்பாகக் கொண்டு செல்லக்கூடியவர் ரணில் விக்ரமசிங்க மட்டும்தான் என சகல இன மக்களும் கூறுகின்றனர்.
எனவே, எதிர் காலத்தில் ஒரு தேர்தல் நடந்தால் அது ஜனாதிபதி தேர்தலாகத்தான் இருக்கும். அந்தத் தேர்தலில் எமது தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பெருவெற்றி பெற வைக்க வேண்டும்.
சென்ற ஜனாதிபதித் தேர்தலில் 69 லட்சம் வாக்குகளைப் பெற்றவரின் பின்னணி பற்றி தெரியாமல் அவருக்கு வாக்களித்த தவறினை இனியும் செய்யக் கூடாது.
யார் ‘சிங்கம்’ என்பது இப்போது அனைவருக்கும் விளங்கியிருக்கிறது. எனவே அடுத்த தேர்தலில் எமது தலைவரை வெற்றிபெறச் செய்யுங்கள்” என அவர் கோரிக்கை விடுத்தார்.
இந் நிகழ்வில் முன்னாள் அமைச்சர் தயா கமகே, முன்னாள் ராஜாங்க அமைச்சர் அனோமா கமகே உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கு முன்னதாக பொத்துவில் தேர்தல் தொகுதிக்கான தலைமைக் காரியாலயம் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.