அறிமுகம்:
உலக நாடுகளிலேயே அல்குர்ஆனை மனனமிடுவதிலும், ஏனைய நாடுகளில் உள்ள முஸ்லிம்களை அதன் பால் தூண்டக்கூடிய நாடுகளின் பட்டியலிலும் சவுதி அரேபியா முன்னிலை வகிக்கின்றது என்று கூறினால் அது மிகையாகாது. அந்த அடிப்படையில் பல பெயர்களில் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிகள் சவுதி அரேபியாவில் நடந்த வண்ணம் உள்ளன, அவற்றுள் மிக முதன்மையான சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி: மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல் குர்ஆன் மனனப் போட்டியாகும். குறித்த போட்டு (ஹி:1399) 1978 முதல் இன்று வரை புனித மக்க மாநகரில், மஸ்ஜிதுல் ஹராமில் நடைபெற்று வருகின்றது, இவ்வருடம் அதன் 43 ஆவது சுற்று நடைபெறுகின்றது, அது 25/08/2023 முதல் 06/09/2023 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த போட்டியில் இதுவரை 6616 ஹாபிழ்கள் கலந்து கொண்டுள்ளனர்.
போட்டியின் நோக்கம்:
முஸ்லிம்களை அல்குர்ஆனுடன் தொடர்பு படுத்தி, உலக முஸ்லிம்களுக்கு இடையே அல்குர்ஆனை மனனம் செய்யும் விடயத்தில் போட்டி தன்மையை ஏற்படுத்தி, சவுதி அரேபியாவின் (அல்குர்ஆனுடனான பலதரப்பட்ட தொடர்புகளையும் உறுதிப்படுத்துவதுமாகும்.
போட்டியில் பிரிவுகள்:
போட்டி பிரதான ஐந்து பிரிவுகளை கொண்டது, அவையாவன:
1- அல்குர்ஆனை முழுமையாக, அதன் ஏழு ஓதல் முறைகளுடன் மனனமிடுதல்.
2- அல்குர்ஆனை முழுமையாக அதன் சொல் விளக்கத்துடன் மனனமிடுதல்.
3- அல்குர்ஆனை முழுமையாக தஜ்வீத் சட்டங்களை பேணி மனனமிடுதல்.
4- அல்குர்ஆனின் 15 ஜுஸ்உக்களை தஜ்வீத் சட்டங்களைப் பேணி மனனமிடுதல்.
5- அல்குர்ஆனின் ஐந்து ஜுஸ்உக்களை தஜ்வீத் சட்டங்களைப் பேணி மனனமிடுதல். இப் பிரிவில் (OIC) நாடுகளில் உறுப்புரிமை இல்லாத நாட்டு முஸ்லிம்களுக்கு மாத்திரமே பங்கு பற்றலாம்.
போட்டியின் பரிசுத் தொகைகளும் சன்மானங்களும்:
இப்போட்டியின் முதல் இரண்டு பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களையும் தட்டிக் கொள்ளும் போட்டியாளர்களுக்கும், ஏனைய மூன்று பிரிவுகளிலும், முதல் ஐந்து இடங்களையும் தட்டிக் கொள்ளும் போட்டியாளர்களுக்கும் பரிசில்கள் வழங்கப்படவுள்ளன, அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த தொகை: 4 மில்லியன் ரியால்களாகும், இதுவல்லாது குறித்த போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து போட்டியாளர்களுக்கும் ஐந்தாயிரம் ரியால்கள் சன்மானமாக வழங்கப்படவுள்ளன, அது இலங்கை நாணயத்தின் படி: (400,000+) (4 இலட்சம்) ரூபாய்களாகும்.
போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் போட்டியாளர்:
குறித்த போட்டியில் 117 நாடுகளிலிருந்து: 166 போட்டியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர், இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியும் ஒருவர் கலந்து கொள்ளவுள்ளார், அவரது பெயர்: அல்ஹாபிழ் M.S.M. ஸாஜித், இவர் மல்வானையைச் சேர்ந்தவர், தற்பொழுது கல்ஹின்னையில் அமைந்துள்ள அல் பஃத்தாஹிய்யா அரபுக் கல்லூரியில் கல்வியைத் தொடர்கின்றார், அவர் போட்டியின் மூன்றாம் பிரிவில் போட்டியிடவுள்ளார், (அதாவது: அல்குர்ஆனை முழுமையாக, தஜ்வீத் சட்டங்களைப் பேணி மனனமிடும் பிரிவு), குறித்த பிரிவில் முதல் ஐந்து இடங்களையும் தட்டிக் கொள்ளும் போட்டியாளர்களுக்கான பரிசுத்தொகை விபரம் பின்வருமாறு:
1- 200,000 ரியால் (1 கோடியே 70+ இலட்சம்)
2- 190,000 ரியால் (1 கோடியே 60+இலட்சம்)
3- 180,000 ரியால் (1 கோடியே 50+ இலட்சம்)
4- 170,000 ரியால் (1 கோடியே 40+ இலட்சம்)
5- 160,000 ரியால் (1 கோடியே 30+ இலட்சம்)
எமது இலங்கை சகோதரர் அல்ஹாபிழ் M.S.M ஸாஜித் குறித்த பிரிவில் முதல் பரிசை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்திப் பிரார்த்திக்கிறேன்.
அதேபோன்று இப்போட்டிக்கு முழு அனுசரணை வழங்கும் சவுதி அரேபியா அரசுக்கும், அதை ஒழுங்கு படுத்தி, செவ்வனே நடத்துகின்ற இஸ்லாமிய விவகாரங்கள் அமைச்சுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
போட்டிகள் முடிவுற்றதும், இன்ஷா அல்லாஹ் இன்னொரு முறை இதே தலைப்புடன் சந்திப்போம்
கலாநிதி M. H. M. அஸ்ஹர்.
பணிப்பாளர்,
பின் பாஸ் மகளிர் கல்லூரி - மல்வானை.