கடந்த ஏப்ரல் மாதம் நோன்பு பெருநாளை அண்மித்த காலப்பகுதியில் அக்குரணையிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என்று ஊடகங்களில் பரப்பப்பட்ட புரளி தொடர்பில் உரிய விசாரணை மேற்கொண்டு, அதன் உண்மைத் தன்மையை நாட்டுக்கும், பொதுமக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு விவகாரத்துக்கான அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனை குழுக் கூட்டத்தின்போதே அவர் மேற்படி வேண்டுகோளை பிரேரணையாகச் சமர்ப்பித்துள்ளார்.
“சிறிய முதலீடு ஒன்றினால் அதிகபட்ச இலாபம் அடையும் வழி” என்ற தலைப்பில் வலையத்தளமொன்றைப் பயன்படுத்தி முகநூலில் இயங்கும் திட்டமிடப்பட்ட ஒரு கும்பலின் வேண்டுகோள் பிரகாரமே மேற்படி குண்டுத் தாக்குதல் சம்பந்தமான தகவலை 118ம் இலக்கத்துக்கு தொலைபேசி ஊடாக வழங்கியதாகவும், அதற்கு காரணமாகிய விடயம் பூகொடை, தண்டாவெளி, புறக்கோட்டை, கொட்டாவ ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளைகளிலும், அழுத்கம மக்கள் வங்கி கிளையிலும் மேற்படி முதலீட்டுக்கான பல இலட்சம் ரூபாய் பணம் வைப்பில் இடப்பட்டதாகவும், பின்னர் அந்த கும்பலின் வங்கி அட்டையும் போலியானதென தெரிய வந்ததால் தன்னால் வைப்பில் இடப்பட்ட பணத்தை மீட்டு தருமாறு கோரிய போது, பணத்தை மீட்டு தர வேண்டுமாயின், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் 118ம் இலக்கத்துக்கு பிரஸ்தாப குண்டுத் தாக்குதல் சம்பந்தமான தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதாக கூறியதாகவும், அவ்வாறு செய்யுமாறு தன்னைத் தூண்டியதாகவும் மேற்படி சந்தேக நபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணையின் போது வாக்குமூலம் வழங்கியதாகத் தெரிய வருகின்றது.
அவசரத் தொலைத்தொடர்பு நிலையத்திற்கு குறித்த தகவலை வழங்கும் படி தலையீடு செய்த தனியார் வங்கிக் கிளைகளின் மற்றும் அழுத்கம மக்கள் வங்கி கிளையின் கணக்கு உரிமையாளர்கள் பற்றி எவ்வித விசாரணைகளும் இன்றி, மேற்படி தகவல் வழங்கிய நபருக்கு எதிராக மாத்திரம் வெவ்வேறு சட்டங்களின் பிரகாரம் பலதரப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, நடவடிக்கை மேற்கொள்ள வழிகோலிய காரணம் என்ன?
அவசர தொலைத்தொடர்பு நிலையத்துக்கு குண்டு தாக்குதல் சம்பந்தமான தகவல் கிடைக்கப்பெற்ற நாளிலும்,அதனை அண்மித்த நாட்களிலும் இது விடயமாக ஊடகங்களின் பிரசாரத்தினால் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்ட அச்சம் பாரதூரமானது.