Our Feeds


Tuesday, August 15, 2023

SHAHNI RAMEES

நண்பிகளின் தண்ணீர் போத்தல்களில் நஞ்சு கலந்த மாணவி: மாணவத் தலைவர் போட்டி காரணம் என தெரிவிப்பு

 

மாணவி ஒருவர் களைக்கொல்லியை குடிநீரில் கலந்து அருந்த கொடுத்ததால் சுகவீனமுற்ற 6 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாரம்மல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 10ஆம் ஆண்டு கல்வி கற்கும் மாணவியொருவர் நேற்று (14) பாடசாலை நேரத்தில் இதனைச் செய்துள்ளார்.

சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள மாணவிகளில், களைக்கொல்லியை தண்ணீரில் கலந்ததாகக் கூறப்படும் மாணவியும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகத்துக்குரிய மாணவி காலைக்கூட்டத்துக்கு வராமல், வகுப்பறையில் தங்கி சக மாணவிகளின் குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி பொடியை கலந்துள்ளமை தெரியவந்துள்ளது.

பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கெமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில், குறித்த மாணவி அடையாளம் காணப்பட்டார்.

நெருங்கிய நண்பிகள் சிலரின்  குடிநீர் போத்தல்களில் களைக்கொல்லி கலக்கப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

களைக்கொல்லி கலந்த தண்ணீரை குடித்துவிட்டு, சக மாணவிகள் வாந்தி எடுத்த நிலையில், அச்சமடைந்த மாணவியும்  அதே தண்ணீரைக் குடித்துள்ளார்.

குறித்த பாடசாலையின் மாணவத் தலைவி பதவிக்கான போட்டியே இந்த சம்பவத்துக்கு அடிப்படையாக உள்ளதாக பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாணவிகளின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »