ஹட்டன் – டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் பற்சிகிச்சை பிரிவு, வைத்தியர்கள் இன்மையால் சுமார் 4 மாதங்களாக குறித்த பிரிவு மூடப்பட்டுள்ளதன் காரணமாக நோயாளர்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து வசதிகளையும் கொண்டுள்ள கிளங்கன் வைத்தியசாலையில் பற்சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய இரண்டு வைத்தியர்கள், 4 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளனர்.
அதன்பின்னர் குறித்த சிகிச்சை பிரிவுக்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த பெண் வைத்தியரும் மகப்பேறு விடுமுறையில் சென்றுள்ளதால் குறித்த சிகிச்சை பிரிவு தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து நுவரெலியா மாவட்ட சுகாதார சேவை பணிப்பாளர் நிஸ்ஸங்க விஜேவர்தன இதுகுறித்து தெரிவிக்கையில்,
பற் சிகிச்சை பிரிவு மூடப்பட்டுள்ளமை தொடர்பில் வைத்தியசாலையிலிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன குறித்த வைத்தியசாலைக்கு, அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பற்சிகிச்சை பிரிவில் கடமையாற்றும், வைத்தியர் ஒருவர் டிக்கோயா வைத்தியசாலைக்கு இணைக்கப்பட்டிருந்தாலும், குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளர் அவரை விடுவிக்காமையினால், அவர் தற்போது வரை டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு கடமைகளுக்காக சமுகமளிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.