இலங்கை மின்சார சபையின் பெண் உத்தியோகத்தர் ஒருவருக்கு – அவரின் ஓய்வுக்கு ஒரு நாள் முன்னதாக வழங்கப்பட்ட பதவி உயர்வு தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பணித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை தலைவர், பொது முகாமையாளர் மற்றும் பணிப்பாளர்களுடன் இன்று (21) காலை நடைபெற்ற சந்திப்பின் போது – இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மின்சார சபையில் சிரேஷ்ட முகாமைத்துவத்துக்கான பதவி உயர்வுகள் தொடர்பாக, அமைச்சின் அனுமதியைப் பெற்று 2020 இல் எடுக்கப்பட்ட 2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவிருந்த சபை தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும் இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்சார சபையின் சீர்திருத்த நடவடிக்கைகள், மின் உற்பத்தித் திட்டங்கள், சொத்துக்கள் முகாமைத்துவம், நிர்வாக மற்றும் செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்தல் மற்றும் மின்சார சபை தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.