Our Feeds


Sunday, August 6, 2023

SHAHNI RAMEES

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் நாட்டுக்கு அச்சமான நிலையை உருவாக்கும் ; வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி

 

மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்குவது நாட்டுக்கு அச்சமான நிலைமையை ஏற்படுத்தும் என்று  தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி பாராளுமன்றின் ஊடாகவே இறுதி தீர்மனம் எடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் உள்ள பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவது தொடர்பில் எமக்கு தமிழ் மக்களுடன் எவ்விதமான பிரச்சினையும் இல்லை. ஆனால் தற்போதைய நிலையில் பொலிஸார் அரசியல் மயமாகியுள்ளதாக பொதுமக்கள் பாரிய குற்றச்சாட்டை சுமத்துகிறார்கள்.

அவ்வாறானதொரு நிலையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்குவது பொருத்தமற்றதாகும். ஏனென்றால் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர் இருப்பார்கள். 

அவர்கள் வெவ்வேறு கட்சிகளையும் பிரதிநிதித்துவம் செய்பவர்களாகவே இருப்பார்கள். பொலிஸ் அதிகாரத்தினை மாகாணங்களுக்கு வழங்குகின்ற போது அந்த முதலமைச்சர்களே பொலிஸாரை நிர்வாகம் செய்யும் நிலைமையே காணப்படும்.

தற்போது தேசிய ரீதியில் ஒரு பொலிஸ் கட்டமைப்பே காணப்படுகின்றது. இதன்போதே பொலிஸ் கட்டமைப்பு மீதான குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் ஒன்பது மாகாணங்களும் பொலிஸ் அதிகாரத்தை கையாளும்போது நாட்டின் நிலை என்னவாகும் என்ற கேள்வி ஏற்படுகின்றது. 

ஆகவே, பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குவதானது அச்சமான நிலையை ஏற்படுத்துகின்றது. எனவே, மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்தே இறுதி தீர்மானம் எடுப்பது பொருத்தமானதாகும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »