Our Feeds


Thursday, August 24, 2023

ShortNews Admin

போட்டிபோட்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துங்கள் - ஜனாதிபதி ஆலோசனை



1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டம் செயற்படுத்தப்பட்டது போன்று கிழக்கு அபிவிருத்தித் திட்டமும் துரிதப்படுத்தப்பட்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரளிக்கும் சூழல் ஒன்று உருவாக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


இந்தியாவின் உதவியுடன் திருகோணமலையை வலுசக்தி, போக்குவரத்து, துறை முகம், கப்பற்துறை, விமானம் , கைத்தொழில் மற்றும் சுற்றுலா மையமாக அபிவிருத்தி செய்யும் இலக்குடன் கூடிய வேலைத்திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

திருகோணமலை விமானப்படை தளத்தில் இன்று (24) நடைபெற்ற திருகோணமலை அபிவிருத்தி தொடர்பான விசேட கூட்டத்தில் கலந்து கொண்டபோதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மாவட்டத்தில் உள்ள அரச காணிகள் மற்றும் மகாவலி காணிகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பில் இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், 2019-2023 காலப்பகுதியில் அந்தக் காணிகளை வழங்குதல் குறித்து அறிக்கையொன்றை தமக்கு வழங்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அபிவிருத்திச் செயன்முறையில் காணிகள் முதன்மையான காரணியாகும் எனவும், அதில் சரியான முகாமைத்துவத்துடன் பேணப்படாவிட்டால், எதிர்பார்க்கும் அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.

அத்துடன், போட்டிபோட்டுக்கொண்டு மத வழிபாட்டுத் தலங்கள் அமைப்பதை நிறுத்துமாறும், எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் மத வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும்போது, ஆளுனர், மாவட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »