இஸ்லாம் என்பது உறவில் அமைதியான மார்க்கம், அநீதியை எதிர்க்கும்போது அது மூர்க்கத்தனமான மார்க்கம் என, தமிழகத்தின் “நாம் தமிழர் கட்சி”யின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு திரைப்பட இயக்குநரும் சமூக செயல்பாட்டாளருமான அமீர் “ஆனந்த விகடன்” இதழில் பதிலடி வழங்கியுள்ளார்.
சீமான், 'இஸ்லாமியர், கிறிஸ்தவர்களைச் சாத்தானின் பிள்ளைகள்' எனப் பேசியது தமிழ்நாட்டு அரசியல் சூழலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து இயக்குநர் அமீரிடம் பேசினோம்.
"இந்தியாவில் நடந்த எந்தப் போராட்டத்தில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் கலந்துகொண்டிருக்கிறார்கள்?", "இஸ்லாமியர், கிறிஸ்தவர்களைச் சாத்தானின் பிள்ளைகள்" என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் பேசினார்.
இது இணையவெளியிலும், பொதுவெளியிலும் கடும் எதிர்வினைகளைக் கிளப்பிவிட்டிருக்கிறது. சீமான் இவ்வாறு பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகச் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களின் அரசியல் முன்னெடுப்பு என்ன?
இதைப்பற்றித் தொடர்ந்து அரசியல், மதம் குறித்த கருத்துகளைப் பேசிவரும் இயக்குநர் அமீரிடம் பேசினோம்.
இதுகுறித்து மிகுந்த நிதானத்துடன் தனது எண்ணங்களை முன்வைத்த அமீர், "இந்தியா சுதந்திரம் பெற்றதில் இஸ்லாமியர்களின் தியாகம் பெருமளவு உண்டு. அதை டெல்லியிலேயே பல இடங்களில் நினைவுச் சின்னங்களாகப் பார்க்கலாம். எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் தேச விடுதலைக்கு ரத்தம் சிந்தியவர்களில் இஸ்லாமியர்கள் கணிசமாக இருக்கிறார்கள்.
இஸ்லாம் என்பது அநீதிக்கு எதிராகக் கட்டமைக்கப்பட்ட இயக்கம்தான். உறவில் அமைதியான மார்க்கம், அநீதியை எதிர்க்கும்போது அது மூர்க்கத்தனமான மார்க்கம். இப்படித்தான் இஸ்லாம் இருக்கிறது. உலக வல்லாதிக்கத்தை இப்பவும் எதிர்த்துப் போராடுவது இஸ்லாம் மார்க்கம்தான்.
சீமானின் இந்தப் பொதுவான சொல்லாடலைப் புரிதலின்றி பேசியதாக எடுத்துக்கொள்கிறேன். ஏதோவொரு கோபத்தில், அந்த இடத்திற்கான அவசரத்தில் பேசியிருக்கிறார். சீமான், பலமுறை இஸ்லாமியர்களின் தியாகத்தையும், நாட்டிற்கு அவர்கள் செய்த பங்களிப்பையும் பற்றிப் பேசியிருக்கிறார். திப்பு சுல்தான் வரலாறு பற்றியெல்லாம் அவரே உச்சி மோந்து பாராட்டிப் பேசியிருக்கிறார்.
இப்போது அவர் இப்படிப் பேசியிருப்பதை தி.மு.க-வின் மீதான கோபத்தில் பேசிவிட்டதாகவே நான் நினைக்கிறேன். தவறாகப் பேசினால், அதற்கான எதிர்வினையை அவர் ஏற்றாக வேண்டும். இந்திரா காந்தியை இரும்புப் பெண்மணி என்றோம். ஆனால், அவரே எமர்ஜென்ஸியைக் கொண்டுவரும்போது கடுமையாக எதிர்த்தோம். ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி என்றார்கள். அவர் தவறு செய்யும்போது அவருக்கும் எதிர்வினைகள் வந்தன. கலைஞர் நன்மை செய்யும்போது இருந்த ஆதரவு, தவறு செய்யும்போது எதிர்ப்பாகி இருக்கிறது.
சீமான் அண்ணன் ஓர் இனத்தையே குற்றச் சமூகமாக மாற்றும்போது கண்டிப்பாக எதிர்ப்பு இருக்கவே செய்யும். அவர் சொல்லிவிட்டதால் இஸ்லாம் குற்றச் சமூகமாகிவிடாது. ஒரு மனிதனின் செயலைத்தான் விமர்சிக்க வேண்டுமே தவிர, பிறப்பை விமர்சிக்கக் கூடாது. இதில் சீமான் அண்ணனுக்குத் தெளிவு வேண்டும். அவர் தவற்றை உணர்ந்துகொள்வார் என நம்புகிறேன்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.
நன்றி: ஆனந்த விகடன்