கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் பிராந்திய பரந்த பொருளாதார கூட்டிணைவில் (RCEP) அங்கத்துவம் பெற்று, ஏனைய ஆசியான் நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்து-பசுபிக் பிராந்தியம் தொடர்பான ‘ஆசியான்’ அமைப்பின் தொலைநோக்கு பார்வைக்கு தான் உடன்படுவதாகவும், அந்த தொலைநோக்குப் பார்வையை முன்னெடுத்துச் செல்வதற்கு பூரண ஆதரவை வழங்குவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள இந்தோனேசிய தூதரகத்தில் கடந்த 8ஆம் திகதி இடம்பெற்ற 56ஆவது “ஆசியான்” தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, ‘ஆசியான்’ அமைப்பில் நுழைவதற்கான முன்மொழிவு நிராகரிக்கப்பட்டதாகவும், அதன் அங்கத்துவம் கிடைக்காததால், அதற்கு மாற்றீடாக, பிராந்திய பரந்த பொருளாதாரக் கூட்டிணைவில் இணைந்து முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
56 வருடங்களுக்கு பின்னர் நாம் ஆசியான் அமைப்பில் இருக்கின்றோம். ஆசியான் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் பலவும் தற்போது மேம்பாட்டை அடைந்துள்ளன.
எவ்வாறாயினும் வங்குரோத்து நிலையை தற்போது முழுமையாக எமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். தற்போது நாம் துரித கதியில் முன்னேற்றத்தை நோக்கி நகரப்போகிறோம். அதன் போது ஆசியான் அமைப்பின் பயணத்தை முன்னுதாரணமாக கொள்வோம். ஆசியான் அமைப்புடன் மிக நெருக்கமாக செயற்படவும் எதிர்பார்த்துள்ளோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்ப்பிட்டுள்ளார்.
அதுவே எனது அரசாங்கத்தின் கொள்கையாகும். ஏனைய அரசாங்களின் கொள்கையும் அதுவாகவே இருக்கும் என நம்புகிறேன்.
எம்மால் மீண்டும் திரும்பிச் செல்ல முடியாது. நாம் முன்னோக்கியே செல்ல வேண்டும். தற்போதைய சர்வதேச நிலைமை குறித்தும் நாம் அவதானம் செலுத்தி வருகிறோம்.இந்து-பசுபிக் பிராந்தியத்தில் ஆசியான் அமைப்பின் எதிர்கால கண்ணோட்டத்துடன் நாம் உடன்படுகிறோம். அந்த நோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கும் அதற்கேற்ப முன்னோக்கிச் செல்வதற்கும் நாங்கள் முழு ஆதரவை வழங்குகிறோம்.
கடல்சார் மையம் என்ற வகையில் இந்தோனேசியாவுக்கு நாம் ஆதரவு வழங்குகின்றோம்.நாம் அதிலிருந்து விலகிச் செல்லவில்லை. இந்த நெருக்கடிகளை முறியடிக்க நாம் ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்வோம். ஆசியான் அமைப்பின் நோக்கானது, இந்து சமுத்திர பிராந்தியத்தை ஒரு முனையாகவும், பசுபிக் சமுத்திர பிராந்தியத்தை மறுமுனையாகவும் அடையாளப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்ப்பிட்டுள்ளார்.