கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தனியார் பஸ் நடத்துனர்கள் நேற்று (29) மாலை தமது வேலைநிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.
பஸ் பாதையை திருத்தும் நடவடிக்கைக்கு எதிராகவே தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையம் – கொழும்பு கோட்டை பஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ணவுடன் நேற்று மாலை இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை கைவிட்டு இன்று முதல் வழமைபோன்று சேவைகளை முன்னெடுப்பதற்கு பஸ் நடத்துநர்கள் தீர்மானித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக இராஜாங்க அமைச்சர் உறுதியளித்ததாக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதிகாரிகள் இரண்டு நாட்களுக்குள் தீர்வை வழங்கத் தவறினால், பஸ் நடத்துனர்கள் பாரிய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று சங்கத்தின் தலைவர் கூறினார்.