(இராஜதுரை ஹஷான்)
கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்த தமிழர்களுக்காகவும், சோழர்களுடன் வடக்கு மற்றும் கிழக்குக்கு வழந்த தமிழர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த இடமளிக்க முடியாது.
இது சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் விரும்பும் இடங்களில் வாழலாம் என குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்தத்துக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் அப்பகுதியில் வாழ்பவர்களின் தலைகளை கொய்வேன் என்று குறிப்பிட்ட கருத்தை நீக்கிக் கொள்ளமாட்டேன், முடிந்தவர்கள் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யலாம். டயஸ்போராக்களின் நோக்கத்துக்கமைய அரசாங்கம் செயற்பட்டால் என் தலைமையில் மீண்டும் போராட்டத்தை தோற்றுவிப்பேன் எனவும் குறிப்பிட்டார்.
கொழும்பில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இலங்கை சிங்கள பௌத்த நாடு. பௌத்தர்கள் எங்கும் வாழலாம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த சிங்களவர்கள் வாழ்வதற்கும், விகாரைகள் அமைப்பதற்கும் தமிழ் அரசியல்வாதிகளிடமும், தமிழ் அதிகாரிகளிடமும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை.
தென்னிந்தியாவில் இருந்து கொழுந்து பறிப்பதற்காகவே மலையகத்துக்கு தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். மறுபுறம் சோழர்களுடன் வந்த தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழந்தார்கள்.
அரச காலத்தில் இலங்கையில் இருந்த பெண்கள் அழகில்லை என்று குறிப்பிட்டுக் கொண்டு சிங்கள அரசர்கள் தென்னிந்தியாவில் இருந்து தமிழ் இளவரசிகளை திருமணம் முடித்து நாட்டுக்கு அழைத்து வந்தார்கள்.
தமிழ் இளவரசிகளுக்காக சிங்கள மன்னர்கள் கோயில்களை கட்டிக் கொடுத்தார்கள். இவ்வாறான பின்னணியில் தான் தமிழர்கள் இலங்கையில் வாழ ஆரம்பித்தார்கள். பிற்பட்ட காலங்களில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொன்மையான விகாரைகள் அழிக்கப்பட்டு அதன் மீது கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. ஆகவே தற்போது கோயில்களை இடிக்க வேண்டும் என்று நாங்கள் ஒருபோதும் குறிப்பிடவில்லை.
தமிழர்கள் சிங்கள பௌத்தர்களுடன் முரண்பாடு இல்லாமல் நல்லிணக்கத்துடன் வாழலாம் அதை எதிர்க்கவில்லை. ஆனால் பௌத்த மரபுரிமைகளை அழித்து இங்கு வாழ முடியாது. ஏனெனில் இது சிங்கள பௌத்த நாடு. கொழுந்து பறிப்பதற்காக மலையகம் வந்தவர்களுக்காகவும், சோழர்களுடன் வந்தவர்களுக்காகவும் நாட்டை பிளவுப்படுத்த முடியாது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்கள் விகாரைகள், மகாநாயக்கர்கள் மீது கை வைத்தார். அவர்களின் தலைகளுடன் களனிக்கு வருவேன் என்று குறிப்பிட்டதை ஒருபோதும் நீக்கிக் கொள்ளமாட்டேன். எனக்கு எதிராக எவரும் வழக்குத் தாக்கல் செய்யலாம்.
டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய அரசாங்கம் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக நான் அரகலயவில் (போராட்டம்) ஈடுபடுவேன். பௌத்தத்தின் மீது பற்றுள்ளவர்கள் என்னுடன் இணைந்துக் கொள்ளலாம் என அழைப்பு விடுத்தார்.