நூரானியா ஜும்மா மஸ்ஜிதின் கீழ்வரும் நூரானியா ஹிப்ள் மத்ரஸாவுக்கு சொந்தமான 06 காணிகளின் ஆவணங்கள் தொடர்பாக 2023 ஆம் ஆண்டு வக்ப் சபை ஒரு கட்டளையை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கின் மனுதாரர்கள் இது தொடர்பாக வக்ப் ட்ரைபூனலில் மேன்முறையீடொன்றை முன்வைத்திருந்தனர்.
அந்த மேன்முறையீடு 2023 ஆகஸ்ட் 05ம் திகதியான இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இன்று மனுதாரர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட வாக்கு மூலத்திற்கு செவிசாய்த்த வக்ப் ட்ரைபூனல் பிரதிவாதிகளுக்கு நோடீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு ஒரு தடை உத்தரவையும் பிறப்பித்துள்ளது.
அதாவது நூரானியா ஜும்மா மஸ்ஜிதின் கீழ் வரும் நூரானியா ஹிப்ள் மத்ரஸாவுக்கு சொந்தமான 06 காணிகளையும் நிதா பவுண்டேஷன் அல்லது ஹசன் பரீத் மௌலவி அல்லது நிதா உறுப்பினர்கள் யாரும் கையுதிர்ப்பு செய்ய முடியாது என்றே வக்ப் ட்ரைபூனல் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு இதே நூரானியா ஜும்மா மஸ்ஜிதின் கீழ்வரும் நூரானியா ஹிப்ள் மத்ரஸாவுக்கு சொந்தமான 06 காணிகளையும் எதிர்தரப்பு பிரிதொரு நிறுவனத்துக்கு மாற்ற முயற்சித்த போது அதற்கு எதிராக வக்ப் சபை கட்டளை பிறப்பித்திருந்தது.
அதாவது நிதா நிறுவனத்துக்கு மாற்றப்பட்ட காணிகள் மீண்டும் நூரானியா ஜும்மா மஸ்ஜிதின் கீழ் வரும் நூரானியா ஹிப்ள் மத்ரஸாவுக்கு மாற்றப்பட வேண்டும் என்றும் அறிவித்திருந்தது. வேறொரு நிறுவனத்துக்கு அந்த காணிகளை மாற்றுவதாக இருந்தால் ஜமாத்தினரின் அனுமதி பெறப்படவேண்டும் என்றும் அறிவித்திருந்தது.
ஆனால் 2020 ஆம் ஆண்டு எதிர்த்தரப்பு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிதா வக்ப் டிரஸ்ட் என்ற நிறுவனத்துக்கு இந்த காணி ஆவணங்களை மாற்ற ஜமாத்தினரின் அனுமதி கிடைத்துள்ளதாக கூறி ஒரு கடிதத்தை எதிர்த்தரப்பு வக்ப் சபையில் முன்வைத்தது.
அந்த கடிதம் குறித்து சரியாக ஆராயாமல் வக்ப் சபை ஒரு தலைப்பட்சமாக அந்த காணி ஆவணங்களை மாற்ற அனுமதி வழங்கியிருந்தது. அதன் பின்னர் குறித்த எதிர்த்தரப்பு இந்த காணிகளை நிதா வக்ப் ட்ரஸ்டுக்கு மாற்றியிருத்தனர்.
இந்த விடயம் மனுதாரர்களுக்கு தெரியவந்தவுடன் வக்ப் சபையின் ஒரு தலைப்பட்சமான தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரர்கள் இன்னுமோர் வழக்கை வக்ப் சபையில் தாக்கல் செய்தனர். ஆனால் அந்த வழக்கை விசாரிக்க தனக்கு நியாயாதிக்கம் இல்லை என்று வக்ப் சபை அறிவித்து வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த சொத்துக்களை மாற்றுவது குறித்து முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் வக்ப் ட்ரைபூனலுக்கு ஒரு கடிதத்தை வழங்கியுள்ளார் என்றும் அதனாலேயே தனக்கு இந்த வழக்கை விசாரிக்க நியாயாதிக்கம் இல்லை என்றும் வக்ப் சபை அறிவித்திருந்தது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரால் வழங்கப்பட்டது என்று பிரதிவாதிகளால் கூறப்பட்ட கடிதம் பணிப்பாளரால் திகதியிடப்படவில்லை என்றும் அவரால் ஒப்பமிடப்படவில்லை என்பதால் அதனை உத்தியோகபூர்வ கடிதமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவ்வாறு வக்ப் சபை கட்டளை இட்டது போல ட்ரைபுனலுக்கு ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டே இல்லை என்றும் குறிப்பிட்ட அந்த நிதா வக்ப் ட்ரஸ்டுக்கு ஒரு நம்பிக்கையாளர் சபையை வக்ப் ட்ரைபூனல் நியமித்திருக்கவும் இல்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
அத்தோடு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள அப்போதைய பணிப்பாளர் ஏ.பீ.எம் அஷ்ரப் அப்படி ஒரு கடிதத்தை வழங்கவில்லை என்றும் அப்படியான ஒரு கடிதத்தில் ஒப்பமிடவில்லை என்றும் சத்தியக்கடதாசி மூலம் அறிவித்துள்ளார். அந்த சத்தியக் கடதாசி மனுதாரர்களால் வக்ப் ட்ரைபூணலில் முன்வைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் ஒரு கடிதம் மூலம் வக்ப் சபையை பிழையாக வழிநடாத்தி அந்த சொத்துக்களை இன்னொரு நிறுவனத்துக்கு மாற்ற முயற்சித்துள்ள காரணத்தால் இதனை நன்கு பரிசீலித்த வக்ப் ட்ரைபூனல் பிரதிவாதிகளான ஹசன் பரீத் மௌலவி மற்றும் ஏனையவர்களுக்கு அந்த 06 காணிகளையும் கையுதிர்ப்பு செய்ய முடியாது என்று வக்ப் ட்ரைபூனல் உத்தரவிட்டது. இந்த வழக்கின் அடுத்த அமர்வு எதிர்வரும் செப்டம்பர் 09 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.