ரணில் சஜித் ஒன்றிணைந்து நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் பயணம் மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
தேசிய வேலைத்திட்டத்திற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைய வேண்டிய தருணம் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் நேற்று (15) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இத்தருணத்தில் ரணில் சஜித் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் மக்களிடம் இருந்து வருவதாகவும், இந்த ஆலோசனைகள் நியாயமானவை என்பதை தானும் ஆமோதிப்பதாகவும் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுடன் இணைவதை விட, அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுவான வேலைத்திட்டத்தில் இணைந்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தை முன்வைப்பது மிகவும் முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரணில் மற்றும் சஜித் இருவருக்குமே நல்ல மற்றும் கெட்ட குணங்கள் இருப்பதாகவும், ஏனைய கட்சித் தலைவர்களிடமும் அவ்வாறே காணப்படுவதாகவும் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர், இனங்கள், மதங்கள் மற்றும் கட்சிகள் என்று நாட்டை பிளவுபடாமல் அடுத்த 25 வருடங்களுக்கு முன்னோக்கி நகர்த்துவதற்கு தேசிய திட்டம் தேவை எனவும் வலியுறுத்தினார்.