பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கில் தனக்கு அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.
இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் நேற்று (08) இம்ரான் கானின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.
“இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க வேண்டும் எனவும் இம்ரான் கானுக்கு பிணை வழங்க வேண்டும் என்பதும் எமது கோரிக்கையாகும் என இம்ரான் கானின் சட்டத்தரணி கோஹார் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் தெஹ்ரீக்- இ-இன்சாவ் (பி.ரி.ஐ) கட்சியின் தலைவரான இம்ரான் கான், பிரதமராக பதவி வகித்தபோது, பெற்ற பரிசுப்பொருட்கள் மற்றும் அவற்றின் விற்பனை தொடர்பான சரியான விபரங்களை அதிகாரிகளுக்கு அளிக்கத் தவறிய குற்றச்சாட் டு தொடர்பான தோஷாகானா ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து இஸ்லாமாபாத் மேலதிக மாவட்ட நீதிபதி ஹுமாயுன் திலாவர் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தார்.
70 வயதான இம்ரான் கானுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பு மாற்றப்படாவிட்டால் அவர் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படலாம்.
இந்நிலையில் இத்தீர்ப்புக்கு எதிராக இம்ரான் கானின் சட்டத்தரணிகள் மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் மேற்படி தீர்ப்புவழங்கப்பட்டதாக மேன்முறையீட்டு மனுவில் இம்ரான் கானின் சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
தாமதத்தை காரணம் காட்டி, இம்ரான் கானின் சட்த்தரணி கவாஜா ஹரீஸின் வாதத்தை கேட்பதற்கு நீதிபதி மறுப்புத் தெரிவித்தார் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேறு சிறைக்கு மாற்றக் கோரிக்கை
முன்னதாக, தன்னை அட்டோக் நகரிலுள்ள சிறைச்சாலையிலிருந்து ராவல்பிண்டியிலுள்ள ஆதியாலா சிறைச்சாலைக்கு மாற்றுமாறு இம்ரான் கான் கோரிக்கை விடுத்திருந்தார்.
இது தொடர்பாக, இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தில் இம்ரான் கானின் சட்டத்தரணிகள் திங்கட்கிழமை மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர்.
இம்ரான் கானை ஏ மற்றும் பி தர வசதிகள் கொண்ட ஆதியாலா சிறையில் அடைக்காமல், அட்டோக் சிறையில் அடைத்துள்ளதன் மூலம் அவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மேற்படி மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கானை சிறையில் அடைப்பதற்கான உத்தரவு ஆதியாலா சிறை அத்தியட்சகரின் பெயரில் பிறப்பிக்கப்பட்டபோதிலும், பஞ்சாப் மாகாண அரசின் உத்தரவினால் அவர் அட்டோக் சிறைக்கு மாற்றப்பட்டதாகவும், எந்த சட்டப்பிரிவின் கீழ் அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவில்லை எனவும் மேற்படி மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசுத்தமான குளியலறையுடன் இணைக்கப்பட்ட, 11 அடி நீளமும் 9 அடி அகலமும் கொண்ட சிறைக் கூண்டில் இம்ரான் கான் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் எனவும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் சட்டத்தரணி நயீம் ஹைதர் பன்ஜோதா இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இம்ரான்கான் கைது செய்யப்பட்ட பின் நான் மட்டுமே அவரை சந்தித்தேன். சிறை நிலைமை எப்படி உள்ளது என அவரிடம் நான் கேட்டேன். தான் இருளான, சிறிய சி வகுப்பு அறையொன்றில் அடைக்கப்பட்டுள்ளதாக இம்ரான்கான் கூறினார்.
திறந்த குளியலறை ஒன்றே அங்கு உள்ளது. அதில் 'ஷவர்' எதுவும் இல்லை. அதில் சுவர்களோ, கதவுகளோ இல்லை எனவும் இம்ரான் கான் கூறினார். சிறையில் ஈக்களும் பூச்சிகளும் காணப்படுவதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்' என்றார்.