தற்பொழுது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ரணில் ராஜபக்ஷ அரசாங்கத்தை துரத்தியடித்து, சஜித் தலைமையிலான புதிய அரசாங்கத்தை எதிர்வரும் காலங்களில் உருவாக்குவோம் என்று ஜக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும்பண்டார தெரிவித்தார்.
“மலையகம் 200” நடைபவனியில் கலந்து கொண்டு தலவாக்கலையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் உரையாற்றும்மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் தெரிவித்த அவர், “2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை ஜக்கிய மக்கள் சக்தி பெற்றது. நான் தலவாக்கலை நகருக்கு வந்து மக்களோடு உறையாடிய போது, தலவாக்கலை இதற்கு முன்பு இ.தொ.கா.வின் நகரம் ஆனால் தற்பொது பொகவந்தலாவ தொடக்கம் நுவரெலியா வரை தமிழ் முற்போக்கு கூட்டணியின் நகரமாக திகழ்கிறது என மக்கள் கூறினர்.
மக்களின் பட்டினியை இல்லாமல் செய்வதற்கும் மக்களின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்குமே நாங்கள் வாக்கு கேட்கிறோம். தேயிலையின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் வேதனம் அறிவிக்கப்படவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்த போதும் தொழிலாளர்களின் வேதனம் அதிகரிக்கப்பட வில்லை.
200 வருடகாலமாக மலையக மக்கள் அனைவரும் இலங்கையர்கள். நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து சகோதரர்கள் மற்றும் உறவினர்கள் போல் ஒரு தேசிய கொடியின் கீழ் வாழவேண்டும். எமது அரசாங்கத்தில் மலையக மக்களுக்கான குடியுரிமையை பெற்றுக்கொடுக்க கடந்த காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நாட்டு மக்களுக்கும் ஜக்கிய மக்கள் சக்திக்கும் நல்ல உறவு முறை உள்ளது. மலையக மக்களுக்கு அதிகூடிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்தவர்கள் முன்னாள் அமைச்சர்களான பழனி திகாம்பரம், மனோகனேசன், இராதாகிருஷ்ணன், வேலுகுமார் ஆகியோர் என்பதை ஞாபகபடுத்த வேண்டும்.
எங்கள் அரசாங்கத்தில் ஏழு பேர்ச்சஸ் காணியினை வழங்கி வீடமைப்பு திட்டத்தை அமைத்து கொடுத்தோம். ஆனால் 2019க்கு பின்னர், ஒரு வீட்டை கூட கட்டவில்லை நாங்கள் கட்டி வைத்த வீட்டை தற்போது உள்ள அமைச்சர்கள் சென்று திறந்து வைத்தார்கள். சஜித் பிரேமேதாசவின் அரசாங்கத்தில் மலையக மக்களுக்கு விட்டுச்சென்ற அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் முன்னெடுப்போம்” என்றார்.