Our Feeds


Saturday, August 19, 2023

SHAHNI RAMEES

குருந்தூர் மலை விவகாரம் உண்மையில் என்ன பிரச்சினை ? - விதுர விக்கிரமநாயக்க கேள்வி

 

(எம்.வை.எம்.சியாம்)

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?  30 வருட காலமாக  இடம்பெற்ற யுத்தம் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்தோம்.நாட்டில் மத விவகாரங்களை  அடிப்படையாகக் கொண்டு  மீண்டும்  கறைப்படிந்த யுகத்தை எமது பிள்ளைகளுக்கு  உருவாக்கிக் கொடுத்து விடக்கூடாது என புத்தசாசனம் மற்றும் மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

திருகோணமலையின் மத்திய கலாசார நிதியத்தின் செயற்திட்டத்தை பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை (18)  விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்  போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எமது நாட்டுக்கு சுற்றுலாத்துறை மூலமே பாரியளவில் அந்நிய செலாவணி கிடைக்கப்பெறுகிறது. நாட்டில் உள்ள தொல்பொருள் மரபுகளை பார்வையிடவே சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். நீண்டகாலமாக இந்த மரபுரிமைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படவில்லை. இதன் காரணமாக பண்டைய காலங்களில் உருவாக்கப்பட்ட இவை தற்போது சிதைவடைந்து கொண்டு வருகின்றன. 

இந்நிலையில் இந்த மரபுரிமைகளை பாதுகாத்து, புனர்நிர்மானம் செய்து மக்களிடத்தில் கையளிக்க வேண்டும். மேலும் இவற்றை  சூழவுள்ள பகுதிகளையும், வாழும் மக்களின் தேவைகளையும் ஆராய்ந்து இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். திருகோணமலையிலும் பல வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பிலான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை  முன்னெடுத்துள்ளோம்.

குருந்தூர்மலை தொடர்பில் தற்போது பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தை அடிப்படையாக கொண்டு நாட்டின் இனங்களுக்கு இடையில் இன முரண்பாட்டை தோற்றுவிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். இங்கு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல்  ரீதியிலான பிரச்சினையா? என உங்களிடம் வினவுகிறேன்.

நாட்டில் இவ்வாறான பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு  இனங்களுக்கும், சமயங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது. 30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாம் பல்வேறு துன்பங்களை அனுபவித்தோம். அவ்வாறானதொரு இருளான, கறைப்படிந்த ஒரு யுகத்தை  எதிர்காலத்தில் எமது பிள்ளைகளுக்கு ஏற்படுத்திக் கொடுத்து விடக்கூடாது. நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே  நாங்கள் முயற்சிக்கிறோம். இங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நாட்டை நல்ல முறையில் வழிநடத்திச் செல்லவே எதிர்பார்க்கிறோம். அதற்கான சகல விடயங்களையும் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வோம் என்றார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »