மாணவர் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நிந்தவூர் பிரதேச அரச பாடசாலையொன்றின் ஆசிரியரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம் இன்று (07) உத்தரவிட்டது.
இதேவேளை இந்த வழக்கின் இரண்டாவது பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள குறித்த பாடசாலையின் அதிபர் – நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, அவரை இரண்டு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு வழங்கினார்.
கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி பாடசாலையின் விளையாட்டு அறையில் வைத்து, குறித்த ஆசிரியர் பாலியல் ரீதியாக மாணவனை துஷ்பிரயோகம் செய்தார் என அதிபரிடம் முறையிடப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் இடம்பெற்று மறுநாள் பாதிக்கப்பட்ட குறித்த மாணவன் அதிபரிடம் முறையிட்ட போதும் – இரு வாரங்கள் கழிந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல், சம்பவத்தை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக மாணவனின் தாயார் தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவத்தை அடுத்து தலைமறைவாகிய ஆசிரியர் – நேற்று ஞாயிற்றுக்கிழமை நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த நிலையிலேயே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.