Our Feeds


Saturday, August 19, 2023

SHAHNI RAMEES

சவால்களை முறியடிக்கக் கூடிய மனப்பான்மை மாற்றத்துடனான கல்வி முறை நாட்டுக்கு அவசியம்

 

ஜெனரல் சேர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கு ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க நேற்று (18) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

எமது நாட்டை முன்னேற்றுவதற்கு இது போன்ற கல்விமுறைதான் அவசியமானது. உண்மையிலே இந்த நாட்டிற்கு, இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை புரிந்து கொள்ளும் வகையில் மனப்பான்மை மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.


நாம் வெவ்வேறு சமயங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வந்த போதும் நாம் தற்போது சரியான பாதையில் பயணிப்பதாக நினைக்கிறேன். இந்தப் பாதையில் நாம் தொடர்ந்து சென்றால், நாம் கனவு கண்ட சிங்கப்பூரைப் போன்று இலங்கையையும் சிறந்த நிலைக்கு உயர்த்தலாம்.

சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு குறித்து நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம். அதில் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்க விசேட பங்கு இருக்கிறது. நமது இளைஞர், யுவதிகளுக்காக புதிய கல்வி முறைகளை உருவாக்கப்பட்டு வருகின்றன.

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக தரமான கல்வி முறைமையை ஏற்படுத்த வேண்டியது மிகவும் பயனுள்ளதாக அமையும். தேவையான அனைத்து விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் முழுமையான வளர்ச்சித் திட்டத்தை முன்வைக்க எதிர்பார்க்கிறோம். ஆனால் அதனை கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டும். ஏனென்றால், நாம் எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார நெருக்கடியில் இதையெல்லாம் ஒரே நேரத்தில் செய்ய முடியாது.


நாம் முன்னோக்கிச் செல்லும்போது சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும். நாம் அதைச் சரியாகச் செய்து வருகிறோம். நமக்குத் தேவையான அறிவைப் பெற்று, உள்ள அறிவைக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும். குறிப்பாக கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் இங்கு முன்னோடியாக இருக்க வேண்டும்.

அரச பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று வெளியேறிய பட்டதாரிகள் ஒவ்வொருவரும் அரச தொழில் கிடைப்பது கட்டாயம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள். இது மிகவும் தவறான அணுகுமுறையாகும். மனப்பாங்கு ரீதியான மாற்றம் ஏற்பட வேண்டும்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். மாணவர் தொகையை அதிகரிப்பது குறித்தும் ஆராயப்படுகிறது. அதன் கிளைகளை குருணாகல், பொலன்னறுவை மற்றும் கொழும்பில் ஆரம்பிப்பது பற்றி கவனம் செலுத்தியுள்ளோம். இது தொடர்பில் உங்களுக்கு வேறு முன்மொழிவுகள் இருந்தால் செவ்வாய் கிழமைக்கு முன்னர் அதனைச் சமர்ப்பிக்க முடியும்”என்று சாகல ரத்னாயக்க தெரிவித்தார்


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »