Our Feeds


Monday, August 28, 2023

ShortNews Admin

சுகாதார அமைச்சர் கெஹலிய ஏன் இன்னும் ஏன் பதவி விலக வில்லை? - முஜிபுர் ரஹ்மான் கோரிக்கை



(எம்.வை.எம்.சியாம்)


நாட்டின் சுகாதாரத்துறை மீது கொண்ட நம்பிக்கையை மக்கள் முற்றாக இழந்துள்ளனர். நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள சுகாதார துறையை மீட்டெடுக்க அமைச்சர் கெஹெலிய  இதுவரையில் எந்த ஒரு வேலைத்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை. 

மருந்து மற்றும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும். 

பதவி விலகுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை  என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாகவும், அமைச்சரை பதவி விலகக்கோரியும் கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றைய தினம் கையெழுத்து சேகரிக்கப்பட்ட போது கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நாட்டின் சுகாதார துறை பாரியதொரு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை மீது கொண்ட நம்பிக்கையை மக்கள் முற்றாக இழந்துள்ளனர். 

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, தரமற்ற மருந்து கொள்வனவு, அவசர மருந்து கொள்வனவு மற்றும் அதன் காரணமாக பறிக்கப்படும் அப்பாவி மக்களின் உயிர்கள் என மக்கள் சுகாதார துறை மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைச்சர் இடத்தில் எந்த ஒரு வேலைத்திட்டங்களும் கிடையாது. மருந்து தட்டுப்பாடு எனும் போர்வையில் அவசர மருந்து கொள்வனவு மூலம்  அதிக விலை கொடுத்து மருந்துகளை கொள்வனவு செய்து சுகாதார துறையை ஒரு வர்த்தகமாக மாற்றியிருக்கிறார்.

துறைக்கு பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் மருந்து தட்டுப்பாடு ஏற்பட முன்னர் உரிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 

 மாறாக தொடர்ச்சியாக கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து மருந்து கொள்வனவை மேற்கொள்கிறார். நாட்டு மக்கள் இந்த மருந்துகளை அதிகம் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

நாட்டில் விசேட வைத்திய நிபுணர்கள் பற்றாக்குறை, அதிகளவிலான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். எதிர்காலத்திலும் வைத்தியர்கள் வெளியேற உள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் இவ்வாறு வெளியேறும் தரப்பினரை தடுத்து நிறுத்துவதற்கும் கூட உரிய நடவடிக்கைகள் அவர் முன்னெடுக்கவில்லை.

மருந்து மற்றும் மருத்துவ மாபியாக்கள் தொடர்பில் அமைச்சர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் பதவி விலக வேண்டும். பதவி விலகுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »