Our Feeds


Thursday, August 17, 2023

Anonymous

குருந்தூர் மலையில் பௌத்தர்கள் ஒன்றிணைய வேண்டும் - உதய கம்மன்பில அழைப்பு

 



(இராஜதுரை ஹஷான்)


குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள். 

புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும். இந்து – பௌத்த மோதலை தடுக்கவும், தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

எதுல்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உருமய கட்சி காரியாலயத்தில் புதன்கிழமை (16) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அர்ப்பணிப்புடன் செயற்படுகிறார்.

நாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழ்பவர்களுக்கு மாத்திரம் தான் பிரச்சினை உள்ளது என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி செயற்படுகிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைய மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மை சமூகமாக வாழும் சிங்களவர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.பௌத்த மரபுரிமைகள் முழுமையாக தமிழ் பிரிவினைவாதிகளால் அழிக்கப்படும்.

2200 ஆண்டுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட குருந்தூர் தூபியை இந்து கோயில் என தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.

நாளை (வெள்ளிக்கிழமை) குருந்தூர் மலையில் இந்து மத வழிபாட்டில் ஈடுபட போவதாக தமிழ் அரசியல்வாதிகள் குறிப்பிட்டுள்ளார்கள.ஆகவே புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர் மலை பகுதியில் ஒன்றிணைய வேண்டும்.குருந்தூர் மலையில் பௌத்த- இந்து மோதலை தடுக்கவும்,தமிழ் அடிப்படைவாதிகளை கட்டுப்படுத்தவும் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »