கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்புகளையும் இலங்கைக்கு வழங்கவுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இலங்கை விஜயத்தின்போது இருதரப்பு உறவுகள் குறித்து பலதரப்பட்ட கலந்துரையாடல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் முன்னெடுத்திருந்த நிலையில், கப்பல் கட்டுமான துறையை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்புகளுக்கும் உறுதியளித்துள்ளார்.
கப்பல் கட்டுமான துறையில் உலகில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது. இலங்கை ஒரு தீவு நாடென்ற வகையில் கப்பல் கட்டுமானத்துறையை அபிவிருத்தி செய்வதன் ஊடாக பொருளாதார ரீதியில் நன்மைகள் கிடைக்கப்பெறும். எனவே, இந்த துறையை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்புகள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக் குழுவிடம் அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.
இவ்வாறானதொரு நிலையிலேயே பிரான்ஸ் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளது. குறிப்பாக, பிரான்ஸ் நாட்டில் உள்ள கப்பல் கட்டுமான நிறுவனங்களை இலங்கையுடன் தொடர்புபடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஜனாதிபதி இம்மேனுவேல் மெக்ரோன் உறுதியளித்துள்ளார். இதற்கு அமைவாக இரு நாட்டு இராஜதந்திர மையங்கள் ஊடாக குறித்த விடயத்தை முன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.