தற்போது நிலவி வரும் வறட்சியான காலநிலை காரணமாக யால தேசிய பூங்காவில் குடிநீர் பற்றாக்குறையால் வன விலங்குகள் அவதியுற்று வரும் நிலையில் இது தொடர்பில் கவனம் செலுத்திய சுற்றுலா வழிகாட்டிகள் குழுவொன்று நேற்று (27) 'சினமன் வைல்ட் ' பிரதான வீதி நுழைவாயிலுக்கு அருகிலுள்ள சிறிய ஏரியை நீரால் நிரப்பியுள்ளனர்.
அதன்படி, சுமார் 60 சுற்றுலா வழிகாட்டிகள் கொண்ட குழு இணைந்து அவர்களுடைய தனியார் பணத்தில் 24 தண்ணீர் பவுசர்களால் ஏரியை நிரப்பவுள்ளனர்.
பின்னர், நாடு முழுவதும் உள்ள வன விலங்குகளை விரும்பும் மக்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்ந்து நீர் நிரப்புவதை தொடர்ந்து செய்வார்கள் என சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு தண்ணீர் நிரப்பிய பின்னர், யானைகள் உள்ளிட்ட பல வன விலங்குகள் குடி நீருக்காக வருகை தந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
யால தேசிய பூங்காவில் உள்ள நீர்தேக்கங்களுக்கு நீர் நிரப்ப அனுமதி கோரியதாகவும் அதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்காத காரணத்தால் பூங்கா பகுதிக்கு வெளியே அமைந்துள்ள குறித்த ஏரியில் நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், 15,000 லீட்டர் தண்ணீர் கொண்ட ஒரு பவுசருக்கு 8,000 ரூபாய் தொகை செலவாகும் எனவும், யார் வேண்டுமானாலும் இவ்வாறு பவுசரை ஆர்டர் செய்து ஏரியை நிரப்பிக்கொள்ளலாம் எனவும் சுற்றுலா வழிகாட்டிகள் தெரிவித்தனர்.