நாட்டில் மீண்டும் ஒர் இனக் கலவரம் ஏற்படுமா என்று ஐயம் எழுகின்றது என பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மீண்டும் ஓர் இனக் கலவரம் ஏற்படுவதற்குரிய சூழ்நிலை காணப்படுவதாக இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழகத்தின் பத்திரிக்கையான தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. இவ் விடயத்தை மேற்கோள் காட்டி நம் நாட்டு பத்திரிகைகளிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது .
இத்தகைய சூழ்நிலையில் 13-வது திருத்த சட்டம் நீக்கப்படும் என்ற கருத்துக்களும் நம் மத்தியில் உலாவுகின்றது. அது அவ்வாறு நடந்தேறினால் நாடு பற்றி எரிவது உறுதி நாடு பிளவு படுவதை தடுப்பதற்காகவே 13வது சேர்த்திருத்தம் உருவாக்கப்பட்டது .
13 நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்துப் பேரணிகளுக்கும் பெருந்தொட்ட மலையக மக்கள் சார்பில் நான் என்னுடைய ஆதரவை முழுமையாக அளிப்பேன்
மேலும் குறுந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வை தடுக்க பௌத்தர்களை அணிதிரலுமாறு ஒரு அமைச்சர் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார். மேலும் மக்களால் நிகராகரிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஒருவர் தலைகளை எடுக்கும் முடிவில் மாற்றம் இல்லை என ஊடகங்களுக்கு செய்தி அளித்துள்ளார். இத்தகைய கருத்துக்கள் மலையகம் போன்று சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற பிரதேசங்களில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பொறுப்பானவர்கள் பொறுப்பற்ற ரீதியில் நடந்து கொள்வது இனவாதிகளுக்கு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது.
அரசியலில் ஓரம் கட்டப்பட்ட ஒரு சில கட்சிகள் தாங்கள் மீண்டும் பலத்தைப் பெற்றுக் கொள்ள இனவாதத்தை ஒரு தூண்டுகோலாக பயன்படுத்துகின்றார்கள். அரசாங்கத்தை கேட்டுக் கொள்வது என்னவென்றால் மேற்குறிப்பிட்ட நிலைமை தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்துவதோடு அவர்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை அழுத்தமாக தெரிவித்துக் கொள்கின்றேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.