எல்.பி.எல் தொடரின் தொடக்க விழாவில் தேசிய கீதம் திரிபு படுத்தப்பட்டு பாடப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் திணைக்களத்திற்கு ஏற்கனவே பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக, தற்போதுள்ள சட்டத்தின் கீழ் இந்த சம்பவத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து அதிகாரிகள் குறிப்பாக ஆய்வு செய்து வருவதாகவும், பொலிஸ் மா அதிபருடன் இன்று (2) கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பிரதமர் தினேஷ் குணவர்தனவின் ஆலோசனையின் பேரில், தேசிய கீதத்தை சிதைத்து பாடியமை தொடர்பில் அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் .கே.டி.என்.ரஞ்சித் அசோகவும் நேற்று (31) விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் குறித்த விசாரணை அறிக்கை விரைவில் பிரதமரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதேவேளை, தேசிய கீதத்தை திரிபுபடுத்தும் வகையில் பாடுவது அல்லது மாற்றுவது சட்டத்திற்கு முரணானது எனவும் அவ்வாறு செய்வோர் மீது தற்போதுள்ள சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்.விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.