கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர் ஒருவர் கோ - அமொக்சிகிளேவ் எனப்படும் நுண்ணுயிர் கொல்லி மருந்து செலுத்தியதை தொடர்ந்து உயிரிழந்தை அடுத்து, குறித்த மருந்தின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வெட்டுக் காயத்திற்கு சிகிச்சை பெறுவதற்காக வரக்காபொலயிலிருந்து வந்த 50 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்தமை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர் குழு மூலமாகவும் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.
குறித்த 21 ஆயிரம் தடுப்பூசிகளை கொண்ட மருந்து தொகுதியிலிருந்து 18 ஆயிரம் தடுப்பூசிகள் இதுவரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அவற்றில் ஒரு தடுப்பூசி தொடர்பில் மாத்திரமே இந்நிலை பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில், அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்திய கடன் உதவியின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.