அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பிரசவத்தின் போது தாதிகளின் அலட்சியத்தால் குழந்தை தரையில் வீழ்ந்ததாக பெற்றோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமது சிசு இன்று (13ஆம் திகதி) காலை உயிரிழந்துள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
அநுராதபுரம் ரவொவ கல்லஞ்சிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் பிரசவத்திற்காக கல்லஞ்சிய வைத்தியசாலையில் கடந்த ஒகஸ்ட் 10ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினமே அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் .
பின்னர் மகப்பேறு வார்டுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
ஆனால், பிரசவத்தின்போது செவிலியர்களின் அலட்சியத்தால் தங்களின் குழந்தை தரையில் விழுந்ததாக அவரும் அவரது கணவரும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட தாயின் நோயறிதல் குறிப்பிலும் பிரசவத்தின் போது குழந்தை தரையில் விழுந்து குழந்தையின் தலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை பிறக்கும் போது அழவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இதயக் கோளாறு காரணமாக குழந்தை உயிரிழந்ததாக இறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.