Our Feeds


Wednesday, August 9, 2023

Anonymous

கல்முனையில் மனித பாவனைக்குதவாத 84 ஆயிரம் கிலோ கொத்தமல்லி மீட்பு - வர்த்தக களஞ்சியசாலைக்கு சீல்!

 



ல்முனையில் மனித பாவனைக்கு உதவாத கொத்தமல்லியை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலையொன்றை அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினர் நேற்று செவ்வாய்க்கிழமை (08) திடீரென முற்றுகையிட்டதை தொடர்ந்து, அங்குள்ள கொத்தமல்லி மூடைகள் கைப்பற்றப்பட்டு, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, களஞ்சியசாலையும் சீல் வைக்கப்பட்டுள்ளது. 


பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற  முறைப்பாட்டுக்கமைய அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி சாலிந்த பண்டார நவரத்ன வழிகாட்டலில், நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலன் விசாரணை பிரிவு அதிகாரிகளினால் கல்முனை-03, அம்மன் கோயில் வீதியில், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மீறி மனித பாவனைக்கு உதவாத பழுதடைந்த 84,875 கிலோ கொத்தமல்லி மற்றும் 300 கிலோ நிறச்சாயம் (டை) என்பவற்றை பதுக்கி வைத்திருந்த வர்த்தக களஞ்சியசாலை ‍நேற்று மாலை முற்றுகையிடப்பட்டது.

இதன்போது, பாவனைக்கு உதவாத கொத்தமல்லி, நிறச்சாயம், விற்பனை செய்வதற்கு தயார்ப்படுத்தபட்ட நிலையில் களஞ்சிய அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  மூடைகள் கைப்பற்றப்பட்டன. 

அதனையடுத்து, 44 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டார். அதன் பின்னர், களஞ்சியசாலை சோதனை செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

இந்நிலையில், களஞ்சியசாலையின் நிலைமை தொடர்பில் எச்சரிக்கையுடனான அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டதோடு, இச்சம்பவம் குறித்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையுடன் இணைந்து இச்சுற்றிவளைப்பில் திருக்கோவில் விசேட அதிரடிப்படையினரும் புலனாய்வு பிரிவினரும் பங்கேற்றதுடன்,   அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத பொருட்களை களஞ்சியப்படுத்தும் வர்த்தகர்கள் இனங்காணப்பட்டு, அவர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றில் அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சட்டத்துக்கமைய வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை, இறக்காமம், அம்பாறை ஆகிய பிரதேசங்களில் கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு உரம் விற்பனை செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த உர விற்பனை நிலையங்களும் திடீர் முற்றுகையிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »