(ஆர்.ராம்)
சீனாவின் ஆய்வுக் கப்பலான ‘ஷி யான் - 6’ நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு ஆய்வுகளின் பின்னர் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பில் இந்தியா உள்ளிட்ட சில இராஜதந்திர தரப்புக்கள் தமது கரிசனைகளை வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த கப்பலுக்கான அனுமதி தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்படுவதாக கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருந்தன.
இந்த நிலையில், குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் அக்கப்பலுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த அனுமதியின் பிரகாரம், ‘ஷி யான் - 6’ எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசிக்கவுள்ளதோடு 17 நாட்கள் தரித்து நின்று ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
குறித்த ஆய்வுப் பணிகளில் தேசிய கடல் வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகாமை நிறுவனம் (நாரா) இணைந்து பணியாற்றவுள்ளதோடு, ருகுணு பல்கலைக்கழகத்தின் பிரத்தியேக ஆராய்ச்சிக்கான கடல் நீர் மாதிரிகளை பெறும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளன.
முன்னதாக, கடந்த ஜூன் 10ஆம் திகதி சீன கடற்படைக்குச் சொந்தமான HAI YANG 24 HAO என்ற 129 மீற்றர் நீளம் கொண்ட கப்பல், 138 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்துக்குள் பிரவேசித்து மூன்று நாட்கள் தங்கியிருந்து சென்றிருந்தது.
ஏற்கனவே, சீனாவின் செய்மதி மற்றும் ஏவுகணை வழித்தட கண்காணிப்புக் கப்பலான யுவான் வாங் - 5 அம்பாந்தோட்டை துறைமுகத்துக்குள் பிரவேசித்துச் சென்றமை தொடர்பில், இந்தியா இலங்கை அரசாங்கத்திடம் தனது கவலைகளையும் கரிசனைகளையும் வெளியிட்டிருந்தது.
அச்சமயத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயதான் அக்கப்பலுக்கான அனுமதியை அளித்தார் என்றும் எதிர்காலத்தில் அவ்விதமான நிகழ்வுகள் மீண்டும் நிகழாது என்றும் அதற்காக உரிய கொள்கை உருவாக்கப்படும் என்றும் இலங்கை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.