Our Feeds


Friday, August 4, 2023

News Editor

600 பேராசியர்கள் ஆறு மாதங்களில் வெளியேற்றம்


 அரசாங்கத்தின் வரிக்கொள்கையினால் கல்வி நிபுணர்கள் துறையைவிட்டு வெளியேறிவருவ தாகவும் இதுவரையான ஆறு மாத காலப் பகுதியில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக் கழகங்களிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.


மேலும், பல்கலைக்கழகங்களில் 04 ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையில் விரிவுரையாளர்களுக்கான பதவி வெற்றிடங்கள் நிலவுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்நிலையில், எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முதலாவது வரி மறுசீரமைப்பு நடவடிக்கை முடிவடைகிறது. இதன்போது, அரசாங்கம் தனது வரிக்கொள்கையை திருத்தியமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க நேரிடும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க எச்சரிக்கை விடுத்தார்.


பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நேற்று முன்தினம் (02) கல்வியமைச்சர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்கள். இந்த சந்திப்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் இடம்பெற்றது.


ரசாங்கத்தின் வரிக்கொள்கை மற்றும் பல்கலைக்கழக கட்டமைப்பிலுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டுள்ளன.


இந்த சந்திப்பின் பின்னர் கருத்து தெரிவித்த பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் கரண ஜயவர்தன, பல்கலைக்கழகங்களில் மந்தநிலை ஏற்பட்டு வருகிறது. முடிவடைந்த ஆறு மாதங்களில் மாத்திரம் 600 வரையான பேராசிரியர்கள் பல்கலைக்கழகங்களிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். ஒருசில கற்கை பீடங்களை முன்னெடுத்துச் செல்வதும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.


11 ஆயிரம் வரையில் விரிவுரையாளர்களுக்கான பதவி நிலைகள் இருக்கின்றன. ஆனால், தற்போது 6, 200 இற்கும் குறைவான எண்ணிக்கையிலேயே விரிவுரையாளர்கள் இருக்கிறார்கள். அதாவது, 04 ஆயிரத்துக்கு அதிகமான பதவி வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளன.


இதுதொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும். வரிக் கொள்கையில் மாற்றத்தை செய்வார்கள் என்று கடந்த ஆறு மாதங்கள் பொறுமையாக காத்திருந்தோம். ஆனால், இதுதொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது போன்று தெரியவில்லை என்று குறிப்பிட்டார்.


அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இலங்கசிங்க, எதிர்வரும் செப்டெம்பர் மாதமாகும்போது, முதலாவது வரி மறுசீரமைப்பு முடிவடையவுள்ளது. அதன்போதும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வை வழங்காவிட்டால் நிச்சயமாக ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நேரிடும்.


நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பும் கல்வித் துறையும் மிகவும் இக்கட்டான நிலையை சந்தித்துள்ளது. கல்வியை கட்டியெழுப்ப முடியாத நிலைமையையே இந்த அரசாங்கம் உருவாக்கி வருகிறது. பதவிகளுக்கு பொருத்தமில்லாதவர்கள் பேராசிரியர்கள் தொடர்பில் பேசுகிறார்கள். பல்கலைக்கழகத்திலுள்ள கல்வி முறை அல்லது பாடசாலை முறையிலுள்ள கல்வி முறைதொடர்பில் அடிப்படை அறிவு இல்லாத வர்கள் இன்று பல்கலைக்கழக பேராசிரியர்கள் பற்றி பேசுகிறார்கள்.


பேராசிரியரொருவர் மாதமொன்றுக்கு 20 – 24 மணிநேரமே தொழில் புரிவதாகவும் இலட்சம் ரூபா உழைப்பதாகவும் தெரிவித்து மக்களை முட்டாளாக்குகிறார்கள். வெளியிலிருந்து கருத்து தெரிவிப்பதை விடுத்துவிட்டு, பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுடன் பேச்சு நடத்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ போன்றோர் முன்வர வேண்டும்.


பேராசிரியர் என்பவர் 04 மணிநேரம் கடமையாற்றிவிட்டு வீட்டில் உறங்கும் நபரல்ல. அவர்கள் இந்த நாட்டில் அபிவிருத்திக்காகவும் கல்வித் துறைக்காகவும் 24 மணிநேரமும் உழைக்கிறார்கள். நாட்டில் ஒட்டுமொத்த வளங்களும் பல்கலைக்கழகங்களிலேயே உருவாக்கப்படுகின்றன. இருந்தபோதும், இந்த அரசாங்கத்தின் இயலாமை, போலித்தன்மையினால் கல்வித்துறையை இக்கட்டான நிலைமைக்குள்ளாக்கி வருகிறார்கள். பேராசிரியர்கள் என்றால் யார் என்று அறியாதவர்கள் இன்று நாட்டின் கல்வி மறுசீரமைப்ப பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது மிகவும் பாரதூரமான பிரச்சினையாகும்.


விஜயதாச மீண்டும் முதலாம் தரத்திலிருந்து கல்வியை ஆரம்பித்து மீண்டும் பல்கலைக்கழகத்துக்கு நுழைய வேண்டும். அப்போது தான் பேராசிரியர் என்பவர் யார் என்பது புரியும். பொய் கருத்துகளை வெளியிடாமல் விஜயதாச அவரின் கருத்தை வாபஸ்பெற வேண்டும். பேராசிரியர் பற்றி தெரியாதவர்கள் நாட்டின் கல்வி தொடர்பில் பேச தகுதியில்லாதவர்கள்.


அதேபோன்று, விஜயதாச ராஜபக்ஷ அவரின் துறை சார்ந்த விடயங்களில் மாத்திரம் கவனத்தில் கொள்ள வேண்டும். எங்களின் பிரச்சினைகளை கல்வியமைச்சருடனும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடி தீர்வை பெற்றுக்கொள்கிறோம். அதற்கு அப்பால் தேவையில்லாத விடயங்களில் சகலரும் தலையிடக் கூடாது என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »