Our Feeds


Thursday, August 3, 2023

Anonymous

600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்

 



(எம்.வை.எம்.சியாம்)


கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 600 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிலிருந்து விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பரண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சம்மேளனம், கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு இடையே கொழும்பில் செவ்வாய்க்கிழமை (01) மாலை சந்திப்பொன்று இடம்பெற்றது.

இதன்போது, தொழில் ரீதியான சிக்கல்கள் தொடர்பில்  கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட வேண்டி ஏற்படும் என சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சம்மேளத்தின் தலைவர் பரண ஜயவர்தன கூறுகையில்,

கடந்த இறுதி 6 மாதங்களில் 600க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தமது தொழிலிருந்து விலகி  நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதன் காரணமாக பல்கலைக்கழகங்களில் சில பீடங்களை நடத்தி செல்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளோம். 600க்கும் அதிகமான வெற்றிடங்கள் நிலவுகின்றன. 

வரிக்கொள்ளை மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர். போராசிரியர்கள் இவ்வாறு விலகி செல்வதை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் வரிக்கொள்ளை தொடர்பில் சாதகமான தீர்மானமொன்றை மேற்கொள்ளும் என நாம் கடந்த 6 மாதங்களாக எதிர்பார்த்தோம். ஜூலை மற்றும் செப்டம்பர் மாதமளவில் எமக்கு ஏதேனும் நிவாரணங்கள் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்தது. இருப்பினும், இதற்கு அரசாங்கம் தயார் இல்லை என தெளிவாகிறது. நாம் இது தொடர்பில் கவலையடைகிறோம். 

எனவே, எதிர்காலத்தில் கடுமையான தீர்மானமொன்றை எடுப்பது தொடர்பில் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடி வருகிறோம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »