அரசாங்கம் தனது சேவைகளை நடத்துவதற்காக நாளொன்றுக்கு 543 கோடி ரூபாவை கடனாக பெற வேண்டியுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கைகள் தெரிவிப்பதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் சராசரி நாளாந்த செலவு 1,425 கோடி ரூபாவாகும் எனவும், இதனால் அரசாங்கம் தனது அனைத்து செலவுகளையும் ஈடுசெய்ய நாளொன்றுக்கு கிட்டத்தட்ட 677 கோடி ரூபாவை கடனாகப் பெற வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் தனது செலவீனத்தில் 91 வீதத்தை தொடர் செலவுகளுக்காகவும் (சம்பளங்கள்) 9 வீதத்தை மூலதனச் செலவுகளுக்காகவும் செலவிடுவதாக தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வருமானம் 1,12,243 கோடி ரூபா எனவும் அரசாங்கத்தின் செலவு 2,13,710 கோடி ரூபா எனவும் அவர் தெரிவித்துள்ளார்.