Our Feeds


Thursday, August 24, 2023

SHAHNI RAMEES

சந்திராயன் 3 ஐ சந்திரனில் தரையிறக்கிய இந்தியாவின் சாதனைக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

 

சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக சந்திரனின் தென் துருவத்தில் தரையிறக்கியதன் மூலம் இந்தியா அடைந்துள்ள தனித்துவமான சாதனைக்காக இந்திய பிரதமர் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.



இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு விசேட வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தியா பெற்றுள்ள இந்த மாபெரும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி தொடர்பில் அண்டை சகோதர நாடாக இலங்கையும் பெருமிதம் கொள்வதாக மேலும் குறிப்பிட்டார்.



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமருக்கு அனுப்பியுள்ள முழுமையான வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

“கௌரவ நரேந்திர மோடி அவர்களுக்கு, சந்திராயன் 3 விண்கலத்தை சந்திரனின் தென் துருவத்தில் முதன்முறையாக வெற்றிகரமாக தரையிறக்கி இந்தியாவின் தனித்துவமான சாதனைக்காக உங்களுக்கும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான (இஸ்ரோ) குழுவினருக்கும், இந்திய மக்களுக்கும், எனதும் அனைத்து இலங்கை மக்களினதும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.



அண்டை சகோதர நாடுகளான இந்தியாவும் இலங்கையும் தனித்துவமான நீண்ட கால நட்பைக் கொண்டுள்ளன. தெற்காசிய குடும்ப உறுப்பினர்கள் என்ற வகையில், இந்த வரலாற்றுச் சிறந்தவாய்ந்த சாதனையை நாங்கள் பெருமையுடன் கொண்டாடுகிறோம்.



அனைத்து மனித குலத்திற்காகவும் செய்யப்படும் இந்த அர்ப்பணிப்பு , உங்களது உன்னத குணத்தை உலகிற்கு பிரதிபலிக்கும் சந்தர்ப்பமாக குறிப்பிடலாம். இது சந்தேகத்திற்கு இடமின்றி எதிர்கால சந்ததியினரை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய ஊக்குவிக்கும்.



சூரியக் குடும்பத்தில் உள்ள ஏனைய கிரகங்களை ஆராய்வதற்கான உங்கள் எதிர்கால இலக்கை அடைவதற்கு உங்களுக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் நல்வாழ்த்துத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன்”


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »