Our Feeds


Wednesday, August 23, 2023

SHAHNI RAMEES

வரலாற்று சாதனை படைக்க தயாராகும் 'சந்திரயான்-3': நிலவில் இன்று தரையிறங்குகிறது...!

 

பூமியின் துணைக்கோளான நிலவு (சந்திரன்) ஆராய்ச்சியில் ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. 



அந்த வரிசையில், கடந்த 2008 ஆம் ஆண்டு 'சந்திரயான்-1' விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி இந்தியா சாதனை படைத்தது. நிலவில் தண்ணீர் இருப்பதையும் அது உறுதி செய்தது. 2019 ஆம் ஆண்டு நிலவின் தென்துருவத்துக்கு 'சந்திரயான்-2' விண்கலம் அனுப்பப்பட்டது. 



ஆனால் அதன் 'லேண்டர்' கருவி நிலவின் தரையில் மோதி உடைந்தது.ஆனால் 'சந்திரயான்-2'-ல் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி தற்போதும் நிலவைச் சுற்றி வந்து தகவல்களை தந்துகொண்டிருக்கிறது. 



இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 14 ஆம் திகதி 'சந்திரயான்-3' விண்கலத்தை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பியது. 



ரூ.615 கோடி செலவில் 40 நாள் பயண திட்டத்துடன் அனுப்பப்பட்ட 'சந்திரயான்-3' விண்கலம், முதலில் புவிவட்டப் பாதையைச் சுற்றி வந்தது. பிறகு நிலவுவட்டப் பாதைக்கு மாற்றப்பட்டு, படிப்படியாக அதன் சுற்றுவட்டப்பாதை குறைக்கப்பட்டது.



கடந்த சில நாட்களுக்கு முன்பு உந்து கலனில் இருந்து 'விக்ரம் லேண்டர்' கருவி பிரிக்கப்பட்டது. இந்த 'லேண்டர்', இன்று (23) மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கவுள்ளது. 



இறுதிக்கட்ட செயல்பாடுகள் சவால் நிறைந்தவை என்பதால், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து 'சந்திரயான்-3' குழுவினர், விஞ்ஞானிகள், பொறியியலாளர்கள் ஆகியோர் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். 



ஏற்கனவே 'சந்திரயான்-2' விண்கலம் மூலம் அனுப்பப்பட்ட 'ஆர்பிட்டர்' கருவி, தற்போதைய 'லேண்டர்' கருவியுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது, சாதகமான சூழ்நிலையாக கருதப்படுகிறது. 



இரண்டும் தங்களுக்கு இடையே தகவல்களை பரிமாறிக் கொண்டுள்ளன. இதனால், 'லேண்டர்' நிலவின் மேற்பரப்பில் மென்மையாக தரையிறங்குவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. 



இந்த 'கிளைமாக்ஸ்' நிகழ்வுக்கு திட்டமிட்டபடி அனைத்து ஏற்பாடுகளும் தயார் என இஸ்ரோ அறிவித்துள்ளது.



நிலவில் லேண்டர் கருவி தரையிறங்கும் காட்சியை காண உலகமே ஆவலோடுள்ளது. 



மாலை 5.20 மணி முதல் இந்த நிகழ்வு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்ரோ செய்துள்ளது. 



தற்போதுவரை, திட்டமிட்டபடி 'லேண்டரின்' செயல்பாடு சரியாக உள்ளது. வழக்கமான பரிசோதனைகளை சீரான இடைவெளியில் விஞ்ஞானிகள் செய்து வருகின்றனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »