Our Feeds


Friday, August 11, 2023

Anonymous

சவுதி அரேபியாவில் உலக இஸ்லாமிய நிறுவனங்கள் தொடர்பான மாநாடு - இலங்கையிலிருந்து 3 பேர் வரவழைப்பு

 



சவுதி அரேபியா இஸ்லாமிய மத விவகாரங்கள் அமைச்சு "உலக இஸ்லாமிய நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தல்" எனும் தொனிப்பொருளில் எதிர்வரும் 12,13 ஆம் திகதிகளில் ஒரு இஸ்லாமிய மாநாட்டை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இம் மாநாடு மக்கா முக்கர்மாவில் நடைபெற உள்ளது.

 

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுமார் 85 நாடுகளிலிருந்து 150 மார்க்க அறிஞர்களை சவுதி அரேபியா வரவழைத்துள்ளதாக தாருள் இமான் நிறுவனத்தின் செயலாளர் அஷ்ஷெய்க் பௌஸுல் அலவி (மதனி) தெரிவித்தார்.

 

உலகெங்கிலும் இருக்கும் இஸ்லாமிய மார்க்க நிறுவனங்களுடன் தொடர்பை ஏற்படுத்தி நடைபெறும் இம்மாநாட்டில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 


இலங்கையில் இருந்து இம்மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மூன்று மார்க்க அறிஞர்கள் மக்கா சென்றுள்ளார்கள். 


எதிர்வரும் 12, 13ம் திகதிகளில் நடைபெறவிருக்கும் இம்மாநாட்டில், உலக இஸ்லாமிய மத நிறுவனங்கள் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் வழங்கும் பங்களிப்பு, இந்நிறுவனங்களுக்கு மத்தியில் காணப்படும் தொடர்புகள், விட்டுக் கொடுப்பும் சகவாழ்வும், குர்ஆனையும் ஹதீஸையும் பற்றிப் பிடிப்பதன் அவசியம், தீவிரவாதத்தை களைவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்புகள், ஒழுக்க சீர்கேடுகளிலிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாத்தல் போன்ற தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

 

இந்த மாநாட்டை சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் வழிகாட்டலில் சவுதி அரேபிய மத விவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. உலக முஸ்லிம்களின் கல்விக்கும் கலாச்சாரத்திற்கும் உறுதுணையாக திகழும் சவுதி அரேபியாவின் இம்மாநாடு சமகாலத்தில் அவசியமான ஒன்றாகும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை.

 

தற்காலத்தில் ஏற்படும் நவீன பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதில் இஸ்லாமிய நிறுவனங்களின் பங்களிப்பு மற்றும் மார்க்க அறிஞர்களின் பங்களிப்பு பற்றியும் விரிவாக ஆராயப்படவுள்ளது. முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமை பேணுதல், இஸ்லாத்தை பிரசாரம் செய்யும் விடயத்தில் சவுதி அரேபியாவின் அனுபவங்கள் போன்ற விடயங்களும் இம்மாநாட்டில் ஆராயப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »