இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள பல்லாண்டு கால பழைமை வாய்ந்த மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பித்து நோக்கங்களை விரிவாக்கம் செய்து, அதில் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து இந்திய வம்சாவளி மலையக எம்.பிகளையும், மலையக கல்வியியலாளர்களையும், சமூக முன்னோடிகளையும், மலையக கல்வி அபிவிருத்திக்காக பணியாற்றும் மன்றங்களையும் ஒன்றிணையுங்கள் என இந்திய தூதுவரிடம் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அண்மையில் இந்திய தூதுவருடன் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன்போது இடம்பெற்ற கலந்துரையாடலுடன் தொடர்புடைய அறிக்கை ஒன்றை வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான நலத்திட்டங்களுக்கு என பெயரிட்டு தர உறுதியளித்துள்ள இலங்கை ரூபாய் 300 கோடி நன்கொடை முழுவதையும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அதற்கு இந்த மலையக கல்வி அறக்கட்டளை, முன்னுரிமை திட்ட வகுப்பாளராக, கண்காணிப்பாளராக செயற்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.