Our Feeds


Monday, August 21, 2023

ShortNews Admin

ரஷ்யாவின் முயற்சி தோல்வி - நிலவில் விழுந்தது “லூனா-25“ விண்கலம் - நடந்தது என்ன?



இந்திய விண்வெளி ஆய்வு மையமான 'இஸ்ரோ' நிலவை ஆய்வு செய்வதற்காக 'சந்திரயான்-3' விண்கலத்தை கடந்த மாதம் 14ம் திகதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.


இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய 'சந்திரயான்-3' விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.




இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷ்யா இடையே போட்டி நிலவுகிறது. 




அந்த வகையில் இந்தியாவின் 'சந்திரயான்-3' விண்கலத்துக்கு போட்டியாக ரஷ்யா கடந்த 10ம் திகதி 'லூனா-25' என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.




கடந்த 17ம் திகதி நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் ரஷ்யாவின் 'லூனா-25' விண்கலம் வெற்றிகரமாக நுழைந்தது. தொடர்ந்து, படிப்படியாக சுற்றுப்பாதையை குறைக்கும் பணிகள் நடந்து வந்தன. 




அதன் தொடர்ச்சியாக 'லூனா-25' விண்கலம் இன்று (21) நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க இருந்தது. விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்குவதற்கான நடவடிக்கைகளை ரோஸ்கோஸ்மோஸ் மேற்கொண்டு வந்தது. 




நிலவில் விழுந்தது. 



இந்த நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 'லூனா-25' விண்கலம் நிலவில் விழுந்தாக 'ரோஸ்கோஸ்மோஸ்' நேற்று தெரிவித்தது. முன்னதாக விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இறுதிக்கட்ட சுற்றுப்பாதையை குறைப்பதில் சிக்கல் ஏற்பட்டதாகவும், அதனால் விண்கலத்துடனான தொடர்பை இழந்ததாகவும் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்தது.




அதை தொடர்ந்து, விண்கலத்துடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்த விஞ்ஞானிகள் தீவிரமாக முயற்சித்த நிலையில் 'லூனா-25' விண்கலம் கணிக்க முடியாத சுற்றுப்பாதையில் நகர்ந்து நிலவின் மேற்பரப்பில் மோதியதாக ரோஸ்கோஸ்மோஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.




இதன் மூலம் 47 ஆண்டுகளுக்கு பிறகு நிலவை ஆய்வு செய்ய ரஷ்ய எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. 




கடந்த 1976ம் ஆண்டு ரஷ்யாவை உள்ளடக்கிய சோவியத் ஒன்றியம் 'லூனா 24' விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. அதன் பிறகு ரஷ்யா சார்பில் முதல் முறையாக நிலவுக்கு அனுப்பப்பட்ட விண்கலம் நிலவில் மோதியது குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »