துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபர் என தனது புகைப்படத்தை தொலைக்காட்சி செய்திகளில் ஒளிபரப்பியதாக கேகாலையைச் சேர்ந்த நபரொருவர், இலங்கையின் இரண்டு தொலைக்காட்சி அலைவரிசைகள் மீது குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (25) பத்தரமுல்லை தலங்கம பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த நபரென தனது புகைப்படம் செய்திகளில் ஒளிபரப்பப்பட்டுள்ளதாக ஜானக்க புஷ்பகுமார என்ற நபர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தான் குறித்த இரு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அறிவித்த போதிலும் சனிக்கிழமை (27) மாலை வரை அந்தப் பதிவு நீக்கப்படவில்லையெனவும் எனவே இது குறித்து தான் பொலிஸ் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த இரு தொலைக்காட்சி அலைவரிசைகளும் தனது முகப்புத்தகத்திலிருந்து புகைப்படம் ஒன்றை எடுத்து, துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்த நபரென எதுவித உறுதிப்பாடும் இன்றி ஒளிபரப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.