நமது நாட்டின் பொருளாதாரத்தை பிரதான தூணாக இருந்து கட்டியெழுப்பும் பெருந்தோட்ட மலையக மக்கள் குறித்து பாராளுமன்ற உயரிய சபையில் முழுநாள் விவாதம் இடம்பெற வரலாற்று சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு மலையக மக்கள் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் இன்று மலையக பெருந்தோட்ட மக்கள் குறித்து பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை அடிப்படையாக கொண்டு அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் மேலும் அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இந்தியாவின் தமிழ்நாட்டில் 19ஆம் நூற்றாண்டின் 1823ஆம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களின் முகவர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மக்களே நமது மலையக மக்களாவர்.
இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட மக்களில் 1823 முதல் 1830 வரையான 7 ஆண்டுகளில் சுமார் இரண்டு இலட்சத்து நாற்பதாயிரம் பேர் பல்வேறு துன்பங்களில் சிக்கி செத்து மடிந்ததாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து சென்றவர்கள் பல நாடுகளில் தங்களுடைய தனிப்பட்ட அடையாளங்களுடன் முன்னேற்றமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் நிலையில் இலங்கைக்கு வந்த தமிழர்கள் மாத்திரம் இன்னும் பின்னடைவான நிலையில் உள்ளனர்.
1948 ஈம் ஆண்டு பிரஜாவுரிமை பறிப்பு, 1964 ம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் மற்றும் வெளியேற்றம். 1971 ஏப்ரல் கிளர்ச்சி மற்றும் அடக்குமுறைகள், பெருந்தோட்ட தேசியவாதம், தோட்டங்களை துண்டு துண்டாக பிரித்து விற்பனை விற்பனை செய்தமை, 1973-ல் உணவுப் பஞ்சம், 1977, 1981,1983 இனக்கலவரம் உள்நாட்டு யுத்தம், மற்றும் ஒடுக்குமுறை காரணமாக, பெருந்தோட்ட மலையக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இவர்களது வாழ்க்கைத் தரம் முன்னேற்றம் இன்றி, ஒரே இடத்தில் முடங்கிக் கிடப்பதற்கு, நாட்டை மாறி மாறி ஆட்சி செய்தவர்களும் மலையக தலைமைகளும் பொறுப்புக்கூற வேண்டும்.
200 வருட வரலாறு என்கின்ற போது 2400 மாதங்கள், - சுமார் 73000 நாட்களை - கடந்து இலங்கை நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் மலையக மக்களுக்கு ஒரு அங்குலம் காணிகூட சொந்தமில்லை - என்று சொல்லும் போது வெட்கித் தலைகுனியாமல் வேறு என்ன செய்வது?
மலையக மக்களுக்கும் இந்த நாட்டில் ஏனைய பிரஜைகள் அனுபவிக்கும் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்.
குறிப்பாக, காணி உரிமை, தங்களை தாங்களே நிர்வகிக்கும் வகையிலான அரசியல் உரிமை, பொருளாதார உரிமை, தொழில் உரிமை, கல்வி - சுகாதார அடிப்படை வசதிகள் உரிமை, எமது மலையக மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
200 வருடகால வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட மலையக மக்களுக்கு காணி மற்றும் வீடமைப்பு விடயத்தில் பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
150 வருடங்கள் பழமை வாய்ந்த லயன் குடியிருப்புகளில் வாழ்த்து வரும் எமது மக்களுக்கு சுதந்திரம் கிடைத்து 75 வருடங்கங்கள் கடந்த நிலையில் வெறும் 25,000 வரையிலான தனி வீடுகளே இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
அதிலும் சுமார் 8,000 வீடுகள் நல்லாட்சியில் வெறும் நான்கு வருடங்களில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகளாகும்.
நல்லாட்சி அரசாங்கத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் சிலவற்றுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலையில் ஏனைய வீடுகளுக்கு காணி உறுதிப் பத்திரம் வழங்கப்படவில்லை.
2 இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் உள்ளிட்ட 10 இலட்சம் மலையக மக்களுக்கு காணி உரிமை தேவைப்பாடாக இருக்கும் நிலையில் வெறும் 2000 அல்லது 3000 குடும்பங்களுக்கு காணி உரிமை வழங்குவது “யானை பசிக்கு சோலப்பொறி போடுவது’ போன்ற செயலாகும்.
மலையக மக்கள் அனைவருக்கும் காணி உரிமை வழங்கப்பட வேண்டும். தோட்டங்களிலும் வசிக்கும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் வீடமைப்புக்கு தேவைக்கான காணியும் - வாழ்வாதாரத்தை முன்னெடுக்க தேவையான காணியும் வழங்கப்பட வேண்டும்.
நல்லாட்சி காலத்தில் வீடமைப்புத் திட்டத்திற்கு 7 பேர்ச் காணி வழங்க அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தில் மேலும் 3 பேர்ச் காணிக்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. மொத்தம் 10 பேர்ச் காணி
இந்த காணி வீடமைப்புத் திட்டத்திற்கு மாத்திரமே !
காணி உரிமை விடயத்தில் எங்களுடைய ஒரே நோக்கம் - மலையக மக்களின் வாழ்வாதாரத்தை அவர்களே முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தற்போது காணப்படும் தேயிலை தோட்டங்களை பெருந்தோட்ட பகுதிகளில் வாழும் குடும்பங்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும்.
இதுவே, எமது மக்களின் காணிப் பிரச்சனைக்கான நிரந்தர தீர்வாகும்
தோட்டப்பாடசாலைகள் பலவற்றில் இன்னும் கட்டிட வசதிகள் இல்லை. காணி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள போதும் அவை இன்னும் முறையாக பாடசாலைகளுக்கு கையளிக்கப்படவில்லை. இதனால், கடந்த காலங்களில் தோட்டப் பாடசாலைகளுக்கு கட்டிடம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டும் - காணி இல்லாத காரணத்தால் அந்த நிதி திருப்பி அனுப்பப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றன.
ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை. கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கு போதியளவு ஆசிரியர்கள் இல்லை. உதவி ஆசிரியர்கள் நியமனத்தில் இன்னும் குறைப்பாடு உள்ளது. சில உதவி ஆசிரியர்களுக்கான நிலுவை கொடுப்பனவு வழங்கப்படவில்லை.
நுவரெலியா மாவட்டத்தில் மலையக பல்கலைக்கழகம் அமைப்பது இன்னும் இழுப்பறியாகவே இருக்கிறது. கல்வித் துறையிலும் மலையக மக்களுக்கு இன ரீதியான பாரபட்சம் காட்டப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஹட்டன் கல்வி வலயத்திலும் - நுவரெலியா கல்வி வலயத்திலும் அதிக தமிழ் பாடசாலைகள் காணப்படுகிற நிலையில், ஹட்டன் கல்வி வலயத்தில் தமிழ் பணிப்பாளர் இருந்த நிலையில் தற்போது அங்கும் பெரும்பான்மையின ஒருவரே தற்காலிக கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நுவரெலியா கல்வி வலயத்தில் 157 பாடசாலைகள் காணப்பட்டுகின்ற நிலையில் அதில் 124 பாடசாலைகள் தமிழ் பாடசாலைகள் இங்கு தமிழர் ஒருவர் கல்விப் பணிப்பாளராக நியமிக்கப்படாதது ஏன்?
சுமார் 80% மான பாடசாலைகளையம் மாணவர்களையும் கொண்ட இவ்விரண்டு கல்வி வலயத்திலும் தமிழ் கல்வி பணிப்பாளர் இல்லை. இது முற்றுமுழுதாக இனப்பாகுப்பாடு இன்று நாடு முழுவதும் சுகாதார பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் சுகாதார பிரச்சினை என்பது முற்றிலும் மாறுபட்டது.
நாட்டில் தரம்குறைந்த மருந்துகள் உட்கொள்வதால், தவறான ஊசிகள் ஏற்றப்படுவதால் பல உயிர்கள் பலியாகின்றன. ஆனால், மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வைத்தியசாலை வசதி இன்றி - மருந்துகள் இன்றி பலர் உயிரிழக்கின்றனர். இவை வெளிச்சத்திற்கு வருவதில்லை.
இந்தியாவில் இருந்து வந்தபோது பெருந்தோட்டப் பகுதி மக்களுக்கு தோட்டத்துறைமார்களே மருந்துகொடுத்து வைத்தியர்களாக செயற்பட்டதாக வரலாறுகள் உள்ளன. தற்போது EMA என்ற ESTATE MEDICAL ASSISTANT தோட்ட வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்பட்டு மருந்து கொடுக்கும் வேலையில் தொடர்ந்து ஈடுபட்டு. வருகினறனர்
200 வருடகால வரவாற்றில், பெருந்தோட்ட மக்கள் ‘தேசிய சுகாதார சேவை நீரோட்டத்தில்’ முழுமையாக இணைத்துக் கொள்ளப்படாமை மிகவும் வருத்தமளிக்கிறது.
தோட்ட வைத்தியசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டும் என்ற ஏற்பாடு இதே பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட போதும் இன்னும் அது நடைமுறைக்கு வரவில்லை.
அனைத்து தோட்ட வைத்தியசாலைகளையும் அரசாங்கம் பொறுப்பேற்று தகுதியான MBBS வைத்தியர்கள் மற்றும் பயிற்சி பெற்ற தாதியர்களை நியமிக்குமாறு கௌரவ சுகாதார அமைச்சர் அவர்களை கோருகிறேன்.
நமது மலையக மக்களின் 200 வருட வலி நிறைந்த வரலாற்றுப் பயணத்தை நினைவுகூர்ந்து அவர்களின் அரசியல், சமூக, பொருளாதார, உரிமைகளை வென்றெடுக்க - அரசியல் கடந்து எல்லா திசைகளிலும் - எமது மக்களின் பிரச்சினைகள் சென்றடைய வேண்டும். இதன்மூலமாவது, எமது மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
-ஆ.ரமேஸ்