Our Feeds


Wednesday, July 19, 2023

SHAHNI RAMEES

#PHOTOS: இவ்வருடத்திற்கான புனித கஃபாவின் ஆடை (கிஸ்வா) மாற்றும் நிகழ்வு..! - விளக்கக் கட்டுரை 👉

 இவ்வருடத்திற்கான கஃபாவின் ஆடை (கிஸ்வா) மாற்றும் நிகழ்வு



முஸ்லிம்கள் தொழுகைகளின் போது முன்னோக்குகின்ற காஃபாவிற்கு

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வருகைக்கு முன்பிருந்தே ஆடை  அணிவிக்கப்படுகின்றது, அதற்கு அரபு மொழியில் (கிஸ்வா) என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. 


பிற்பட்ட காலப்பகுதியில் கி பி 1927 ஆம் ஆம் ஆண்டு வரை எகிப்தில் அதற்குரிய ஆடை தயாரிக்கப்பட்டு விலாவாரியாக அது மக்காவிற்கு கொண்டு வந்து சேர்க்கப்பட்டது. 1927 (ஹி: 1346) ஆம் ஆண்டு மன்னர் அப்துல் அஸீஸ் அவர்களின் காலத்தில் கஃபாவின் ஆடையை நெய்வதற்கு என ஒரு பிரத்தியேக நிறுவனம் உருவாக்கப்பட்டது, அதற்கு: (கஃபாவின் ஆடையைத் தயாரிப்பதற்கான மன்னர் அப்துல் அஸீஸ் வளாகம்) என்று பெயரிடப்பட்டது. அந்நிறுவனம் மக்காவில் அமைந்துள்ளது, இன்று வரை அவ்வளாகத்திலேயே  கஃபாவின் ஆடை தயாரிக்கப்பட்டு வருகின்றது.


கஃபாவின் ஆடை 1300 KG எடையைக் கொண்டது: 670 KG கருப்பு சாயம்  போடப்பட்ட உயர்தர பட்டையும், 100 KG வெள்ளி கம்பி நூலையும், 120 KG தங்க முலாம் பூசப்பட்ட கம்பி நூலையும் அது உள்ளடக்கியுள்ளது. அதன் உயரம் 14 மீட்டர் ஆகும், அதைச் சூழ ஒரு பெல்ட் போடப்பட்டிருக்கும், அதன் நீளம் 64 மீட்டர்கள், இன்னும் அதன் அகலம் 95 சென்டிமீட்டர்கள் ஆகும். 


காபாவின் ஆடை வழமையாக துல்ஹஜ் மாதம் ஒன்பதாம் நாள், அரபா தினத்தில், ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடுகின்ற நாளில் மாற்றப்படும், சென்று வருடம் (ஹி: 1444 | 2022) முதல்  கஃபாவின் ஆடைமாற்றம் முஹர்ரம் மாதம் முதலாம் திகதி இடம்பெற்று வருகிறது. அந்த அடிப்படையில் சவுதி அரேபியாவின் கலண்டர் படி இன்று (1 முஹர்ரம் 1445) 19/07/2023 புதன்கிழமை இவ்வருடத்திற்கான கஃபாவின் ஆடை மாற்றும் நிகழ்வு நடைபெறும்.


Dr. M H M Azhar (PhD)

பணிப்பாளர்

பின் பாஸ் மகளிர் கல்லூரி - மல்வானை








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »