Our Feeds


Saturday, July 22, 2023

Anonymous

அடாவடியில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட இனவெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் - கஜேந்திரன் MP

 



முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் கடந்த 14ஆம் திகதி அடாவடியாகச் செயற்பட்ட பொலீஸார், பௌத்த பிக்குகள் மற்றும், பெரும்பாண்மையினத்தைச் சார்ந்த இனவெறியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.


அதேவேளை  குருந்தூர்மலையில் பொலிசாரால் ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன் தாக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரன் அது தொடர்பிலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (20) உரையாற்றும்போதே அவரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தாடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

குருந்தூர்மலை என்பது வடகிழக்குத் தாயகத்தைச் சேர்ந்த ஒரு பிரதேசத்திலிருக்கின்றது.

வடகிழக்குத் தாயகம் என்பது தமிழர்களுடைய பூர்வீகமான பிரதேசமாகும். தமிழர்கள் பல்லாயிரம்  ஆண்டுகள் ஆட்சிசெய்து வாழ்ந்த ஒரு பாரதேசமாகும்.

அந்தமண்ணினை ஆக்கிரமித்து, அத்துமீறி ஒரு விகாரை கட்டப்பட்டிருக்கின்றது. குறிப்பாக அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க குருந்தூர்மலையில் தொல்லியல் அழ்வுப்பணிகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்து, குறித்த அகழ்வுப் பணிகளை மிக இரகசியமானமுறையில் பேரினவாதிகளைவைத்து மேற்கொள்ளப்பட்டு, அங்கே ஒரு பொய்யான வரலாறு முன்வைக்கப்பட்டு அங்கு ஒரு பொய்யான ஒரு விகாரை கட்டியெழுப்பப்பட்டிருக்கின்றது.

அந்த விகாரை அகற்றப்படவேண்டும். குறித்த விகாரை சட்டவிரோதமாக கட்டப்பட்ட விகாரையாகும். பொய்யாக உருவாக்கப்பட்ட வரலாற்றின் அடிப்படையில்அந்த விகாரை அமைக்கப்பட்டிருக்கின்றது.

இது தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்குமிடையிலே விரிசலை  ஏற்படுத்துவதற்காக இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

இந்த இனவாதச் செயற்பாடுகளை இந்த அமைச்சர்கள் கைவிடவேண்டும். அது தமிழர்கள் பூர்வீகமாக வாழ்ந்த மண், அந்தமண்ணிலே நாம் ஒரு போதும் எமது உரிமைகளை  விட்டுக்கொடுக்கமாட்டோம்.

கடந்த 14ஆம் திகதி அந்த இடத்திலே இருந்த ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தை வழிபடுவதற்காக மக்கள் அங்கேசென்றிருந்தனர். நாமும் அங்கே சென்றிருந்தோம்.

அங்கே திட்டமிட்ட ரீதியில் களமிறக்கப்பட்ட பௌத்த பிக்குகளும், சிங்கள இன வெறியர்களும் எம்மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். காவல் துறையினரும் எம்மீது தாக்குதல் மேற்கொண்டனர்.

என்னைக் கீழே தள்ளிவீழ்த்தி உதைந்தார்கள், மக்களையும்  கண்மூடித்தனமாகத் தாக்கினார்கள். அதேவேளை கே.பி.என்.சம்பத் என்னும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர், 72008இலக்கம் உடையவர், விஜயரத்தினம் சரவணன் எனும் ஊடகவியலாளரைத் தாக்கி அவருடைய ஔிப்படக்கருவியை சேதப்படுத்தியிருக்கின்றார்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும். எம்முடைய வழிபாட்டுரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »