லங்கா பிறீமியர் லீக் ஆரம்ப விழாவில் பிரபல பாடகி உமாரா சிங்கவன்ச தேசிய கீதத்தை இசைக்கும் போது தவறாக பாடியுள்ளமைக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என புத்த சாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற லங்கா பிறீமியர் லீக் ஆரம்ப விழாவில் பிரபல பாடகி உமாரா சின்ஹவன்ச, தேசிய கீதத்தைப் பாடும் போது ஒரு முக்கியமான வரியை தவறாக உச்சரித்த காணொளி சமூக ஊடகங்களில் விவாதப்பொருளானது.
குறித்த காணொளியில், அவர் ‘நமோ நமோ மாதா’ என்பதற்குப் பதிலாக ‘நமோ நமோ மாஹதா’ என்று மீண்டும் மீண்டும் பாடுவது பதிவாகியுள்ளது.
இந்நிலையில், எந்தவொரு நாட்டின் தேசிய கீதமும் அந்நாட்டின் அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் பிரதிநிதித்துவப்படுத்துவதால் அதை யாரும் சிதைக்க முடியாது. எனவே, தேசிய கீதம் சிதைக்கப்படும் இதுபோன்ற சம்பவங்களை மன்னிக்க முடியாது.
ஒரு தேசிய கீதத்தை ரீமிக்ஸ் செய்யவோ அல்லது ராப் இசையாக பாடவோ முடியாது. எனவே, அண்மையில் நடந்த சம்பவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருகிறது. மேலும், இது தொடர்பாக உரிய தரப்பினருக்கு தெரியப்படுத்தவும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.
மேலும், தேசிய கீதத்தைப் பாடுவதற்கு ஒரு முறையான வழிமுறை உள்ளது. அந்த பதிப்பு யூடியூபில் இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் நிர்வாணமாக தேசிய கீதம் இசைக்கப்பட்டாலும் நான் ஆச்சரியப்படுவதற்கில்லை” என அமைச்சர் குறிப்பிட்டார்.