Our Feeds


Monday, July 24, 2023

Anonymous

அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் நாமே வெல்வோம் - JVP ஒரு கொலைகார கலாச்சாரம் கொண்ட கட்சி - அமைச்சர் பிரசன்ன

 



எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் ஆதரிக்கப்படும் வேட்பாளர் நாட்டின் ஜனாதிபதியாக வருவார் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.


மக்கள் விடுதலை முன்னணி ஒரு கொலை கலாசாரத்தைக் கொண்ட கட்சி எனத் தெரிவித்த அமைச்சர், மொட்டு ஒரு போதும் கொலைகாரக் கட்சி அல்ல என்றும், நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி என்றும் குறிப்பிட்டார்.

நேற்று இடம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அத்தனகல்ல தொகுதிக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைக் குறிப்பிட்டார். வெயங்கொடை அநுர பண்டாரநாயக்க அரங்கில் இந்தக் தொகுதிக் கூட்டம் நடைபெற்றது.

அமைச்சர் மேலும் கூறியதாவது,

“கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போராட்டத்தால் சில பின்னடைவுகளைச் சந்தித்தோம். போராட்டத்துடன் சேர்த்து 69 இலட்சம் எடுத்த எமது ஜனாதிபதி பதவி விலகினார். மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கொண்டிருந்த நமது பிரதமர் தலைமையிலான அரசு பதவி விலகியது. எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. நாங்கள் அச்சுறுத்தப்பட்டோம். ஆனால் இப்போது நாங்கள் பலமாக இருக்கிறோம்.

அத்தனகல்ல இலங்கை சுதந்திரக் கட்சியை சார்ந்த தொகுதியாகும். ஐந்து பெரும் சக்திகளைத் திரட்டி உருவாக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை வழங்கிய மகிந்த ராஜபக்ச 2015 ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட போது, எமது முன்னாள் கட்சி உறுப்பினர்களின் சார்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை உருவாக்கினோம். கிராம அளவில் கட்சி உறுப்பினர்களை ஒன்று திரட்டி கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தோம்.

மகிந்த அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அவர் மீண்டும் வருவார் என நாம் நினைக்கவில்லை. அவருக்காக நாடு முழுவதும் சென்றோம். மகிந்த காற்றை உருவாக்கினோம். அதற்கான ஆற்றலை கம்பஹா எமக்கு வழங்கியது.

2018 தேர்தல் நடந்த போது அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தலில் நில்லுங்கள் என்றார்கள். தனியாகக் கேட்போம் என்று நான் பகிரங்கமாகச் சொன்னேன். அப்புறம் எல்லாரும் முடிவு பண்ணி தனியாகக் கேட்டோம். நாங்கள் வெற்றி பெற்றோம்.

ஜனாதிபதித் தேர்தலின் போது கம்பஹாவில் 3.5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். பொதுத் தேர்தலின் போது 13 ஆசனங்களைப் பெறுவோம் என்று கூறினேன். நாங்கள் 13 ஆசனங்களில் வெற்றி பெற்றோம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நான் ஒருபோதும் குறை கூற மாட்டேன். மகிந்த ராஜபக்ச அவர்கள் நாட்டை போரிலிருந்து காப்பாற்றி நாட்டிற்கு பலத்தை கொடுத்தது போல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய அவர்கள் நாட்டையும் எமது மக்களையும் கொவிட் தொற்றிலிருந்து காப்பாற்றினார்.

உலகப் பொருளாதாரம், இயற்கைச் சீற்றங்கள், கொரோனா தொற்று போன்ற காரணங்களால் நமது நாட்டின் பொருளாதாரம் சரிந்தது.

JVP ஒரு கொலைகார கலாச்சாரம் கொண்ட கட்சி. மக்களைக் கொலை செய்த கட்சி. போராட்டத்தின் போது கம்பஹாவிலேயே பெரும்பாலான வீடுகள் எரிந்து சேதம் ஏற்பட்டது. அதிலும் அதிக சேதம் மினுவாங்கொடையிலேயே ஏற்பட்டது.

எங்களின் 13 வீடுகள் எரிக்கப்பட்டன. மொட்டின் சக்தியை உடைக்க எங்களை அடித்தார்கள். நாங்கள் கடினமான காலங்களை கடந்து வந்துள்ளோம். இவை எமக்கு சவால்கள் அல்ல. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அடித்து வீழ்த்துவது எங்களுக்குப் பெரிய விடயம் அல்ல. ஆனால் நாங்கள் அவர்களை அடிக்கப் போகவில்லை. எனது வீட்டை எரிக்க வந்தவர்களில் 6 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். இயற்கை அவர்களை தண்டிக்கும். நாங்கள் மக்களைக் கொல்லும் கட்சி அல்ல. நாங்கள் நாட்டுக்காக உழைத்த கட்சி.

இனிவரும் காலங்களில் கிராமம் தோறும் சென்று எமது கட்சியையும் எமது கட்சி உறுப்பினர்களையும் மேலும் மேலும் பலப்படுத்துவோம். இனிமேல் எங்கள் கட்சிக்காரர்களை சீண்டுபவர்கள் வட்டியுடன் சேர்த்து முதலையும் வழங்க வேண்டும் என்பதை நான் தெளிவு படுத்துகிறேன். இதை ஒரு அச்சுறுத்தலாக எடுத்துக்கொள்ளலாம். எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். இன்று ஜேவிபி அலை இல்லை. யார் விரும்பினாலும் ஆட நாங்கள் தயாராக இல்லை.

அடுத்த ஆண்டு நாங்கள் தேர்தலை சந்திப்போம். செப்டம்பர் மாதத்திற்குள் நமது பொருளாதாரம் வலுவடையும். நாடு பலமாகும்போது நாங்கள் தேர்தல் ஒன்றைத் தருவோம். நமது தலைவர்கள் நாட்டை போரிலிருந்து காப்பாற்றினார்கள். கோவிட் நோயிலிருந்து நாட்டைக் காப்பாற்றினார்கள். நாங்கள் அப்படிப்பட்ட கட்சி. மேலும் நான் கூறுகின்றேன், அடுத்த தேர்தலில் மொட்டுடன் இணைந்து போட்டியிடும் ஒருவரே ஜனாதிபதியாவார். அதே போல் நாங்கள் அடுத்த அரசாங்கத்தையும் அமைப்போம். உங்கள் ஆதரவுடன் நாங்கள் அதை நிச்சயமாக செய்வோம்" என்று அவர் கூறினார்.

வனவிலங்கு மற்றும் வனவள அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.

"வரலாற்றில் சரியான முடிவுகளை எடுத்த ஒரு சக்தியாக நாங்கள் இருக்கிறோம். நாங்கள் நாட்டை நேசிக்கும் சக்தியாக இருக்கிறோம். இந்த சக்தி முதலில் பண்டாரநாயக்காவால் பிறந்தது. அதன் பிறகு பல்வேறு தலைவர்கள் இந்த சக்திக்கு வந்தனர். வெவ்வேறு பெயர்கள் கொடுக்கப்பட்டன. எந்தத் தலைவர்கள் வந்தாலும், என்ன பெயர் சூட்டினாலும், அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்து நாட்டில் நிலைத்து நிற்கும் சக்தி இது. இந்த சக்தியிலிருந்து பிறந்த மகிந்த ராஜபக்ச அவர்களின் முடிவின் படியே நாட்டின் போர் முடிவுக்கு வந்தது. இந்த சக்தியால்தான் நாட்டை வளர்த்தார். கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக்க முடிவு செய்தது இந்த சக்திதான். சேதனப் பசளை போன்ற அவர் எடுத்த சில முடிவுகளால் சிக்கல்கள் எழுந்தன. நாட்டில் போராட்டம் நடந்ததால் பதவி விலகினார். அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக்க சரியான தீர்மானத்தை எடுத்தோம்.

பாராளுமன்றத்தின் ஜனாதிபதி தெரிவின் போது ரணில் விக்கிரமசிங்க மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரும் முன் நின்றனர். யாருக்கு வாக்களிப்பது என்று யோசித்தோம். அப்போது நாட்டின் ஜனநாயகம் குறித்த கேள்விகள் எழுந்தன. போராட்டங்கள் நடந்தன. நாட்டில் வேறு பிரச்சினைகள் இருந்தன. இதைப் பார்த்துவிட்டு ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்க முடிவு செய்தோம். அவருடன் எங்களுக்கு அரசியல் ரீதியாக பெரிய கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஆனால் அவர் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவார், சர்வதேச உறவுகளின் அடிப்படையில் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நாங்கள் அவருக்கு ஆதரவளித்தோம்.

நாட்டின் இளைஞர்களின் அடுத்த தலைமுறையை ஏமாற்ற ஜே.வி.பி. முயற்சி செய்கிறது. இளைஞர்கள் பேஸ்புக்கைப் பார்த்து முடிவெடுக்கிறார்கள். பெரியவர்களான உங்களைப் போன்று சமுதாயத்தைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லை. கியூபா போன்ற அரசாங்கத்தை கட்டியெழுப்புவதாக ஜே.வி.பி. கூறுகின்றது. அமெரிக்காவைப் போன்ற வாழ்வைக் கொடுப்பதாகவும் கூறுகிறது. இளைஞர்கள் சிலர் இந்தக் கயிறுகளை விழுங்குகிறார்கள். இதைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

2015 இல் நாம் தோற்றபோது, பெரும்பான்மையான சக்திகள் எங்களுடன் இருந்தன. என்.ஜி.ஓ. க்களால் பராமரிக்கப்படுகின்ற சிலர் பொய்யான தகவல்களை பரப்புகின்றனர். போர் நடத்துவது தவறு என்றனர். கடன் வாங்குவது தவறு என்றனர். பெரும்பான்மை மக்களின் கருத்தை அடக்கி, பணம் வீசப்பட்டு என்.ஜி.ஓ சித்தாந்தங்களை நாட்டில் பரப்பி வருகிறார்கள். இன்றும் அது நடக்கிறது.

ஜே.வி.பி இன்று வரலாறு பற்றி பேசுகிறது. அவர்கள் நாட்டுக்கு என்ன செய்தார்கள்? 88-89 இல் சுதந்திரக் கட்சியின் தலைவர்களைத் தேடித் தேடி வேட்டையாடினார்கள். இடதுசாரி தலைவர்கள் கொல்லப்பட்டனர். விஜய கொல்லப்பட்டார். ஐ.தே.க தலைவர்கள் கொல்லப்பட்டனர். 50 வருடங்களாக ஜே.வி.பி. நாட்டுக்கு என்ன செய்தது? பேருந்துகளை எரித்து, சொத்துக்களை அழித்து, மக்களைக் கொன்று நாட்டையே அழித்தார்கள். சந்திரகா அவர்களின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் எம்முடன் இருந்தனர். என்ன செய்தார்கள்? 1000 அணைகள் கட்டுகிறோம் என்று ஏராளமான பணத்தை வீணடித்தனர். அவர்களுக்கு திஸ்ஸமஹாராம உள்ளூராட்சி சபையின் அதிகாரத்தை தென்பகுதி மக்கள் வழங்கினர். அவர்கள் வேலைசெய்தார்களா? எனவே, அடுத்த முறை அவர்களுக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கவில்லை. ஜே.வி.பி வெறும் வாய்ச் சொல் வீரர்களே.

போராளிகள் என்ன செய்தார்கள்? பாராளுமன்றத்தில் எம்முடன் இருந்த தோழர் அமரகீர்த்தி அடித்து நிர்வாணப்படுத்தப்பட்டு நடுவீதியில் கொலை செய்யப்பட்டார். எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன. அமைச்சர் பிரசன்ன வீட்டுக்கும் தீ வைக்கப்பட்டது. பலரது வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. எங்கள் கட்சியினரும் பல வழிகளில் துன்புறுத்தப்பட்டனர்.

ஐரோப்பாவில் கோவிட் காரணமாக பலர் உயிரிழந்தனர். பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் ஒக்ஸிஜன் இல்லாமல் இறந்தனர். அடக்கம் செய்ய இடமில்லை. அந்தளவுக்கு பலர் இறந்தனர். ஆனால் நாங்கள் அதை நடக்க விடவில்லை. நமது சக்தி நாட்டையும் மக்களையும் பாதுகாத்தது. அன்புள்ள கம்பஹா மக்களே, இந்த சக்தி அடங்கிப் போவதற்கு ஒருபோதும் இடமளிக்காமல் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன் இணைந்து கொள்வீர்கள் என்பதை நான் அறிவேன். மேலும் நான் சொல்கிறேன், அடுத்த தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. மேலும் யாரும் ஜனாதிபதியாகவும் முடியாது. பல்வேறு இன்னல்கள், தொல்லைகள், அவமானங்களுக்கு மத்தியில் நீங்கள் எங்களுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான உபுல் மகேந்திர ராஜபக்ஷ, சஹன் பிரதாப், கோகிலா ஹர்ஷனி குணவர்தன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் பிரதிநிதிகள், கட்சி உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »