சுவீடனை தொடர்ந்து டென்மார்க் தலைநகரில் உள்ள ஈராக் தூதரகத்தின் முன்பாகவும் புனித குர்ஆனின் பிரதியொன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
பேச்சுரிமையைப் பாதுகாக்கும் விதிகளின் கீழ், அண்மையில் சுவீடனில் குர்ஆனை எரிக்க அனுமதித்ததையடுத்து, ஈரான் மற்றும் ஈராக் முழுவதும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இந்தநிலையில், கடந்த வியாழக்கிழமை பக்தாத்தில் உள்ள சுவீடன் தூதரகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
சுவீடனில் மீண்டுமொரு குர்ஆன் பிரதி எரிக்கப்படுமாயின், அந்த நாட்டுடனான இராஜதந்திர தொடர்புகளை துண்டிக்க வேண்டியேற்படுமென ஈராக் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் 'டானிஷ் தேசபக்தர்கள்' என்று அழைப்படும் குழுவின் இரண்டு உறுப்பினர்கள், கடந்த வாரம் இதேபோன்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தியதுடன் அதனை பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
குறித்த இருவரால், டென்மார்க் கோபன்ஹேகனில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் குர்ஆன் எரிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, குரானை இழிவுபடுத்துபவர்கள் மிகக் கடுமையான தண்டனையை எதிர்கொள்ள வேண்டும் என்று ஈரானிய உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கடந்த சனிக்கிழமை கூறினார்.